வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டிலை தி.மு.கழகம் அறிவித்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபடியே இருக்கின்றன. வாரிசுகள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, கனிமொழி ஆதரவாளர்களுக்கு சீட் தரப்படவில்லை, மூத்த தலைவர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இப்படி புறக்கணிக்கப்பட்ட மூத்த தலைவர் பட்டியலில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணனையும் சொல்லி, பல தரப்பிலும் ஆதங்கம் எழுந்தது.
“ஈழப் போராட்டத்துக்கு பெரும் உதவிகள் செய்த கே.எஸ். ராதாகிருஷ்ணனுக்கு, ஈழத்தமிழர் மத்தியில் தனி மதிப்பு உண்டு. ஆனால், 2009ம் ஆண்டு, ஈழத்தமிழரை காட்டிக்கொடுத்துவிட்டது தி.மு.கழகம் என்று ஈழத் தமிழர்களிடையே தி.மு.க. மீது கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த நிலையில், அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை ஜெனிவாவுக்கு அழைத்துச் சென்று ஈழத்தமிழருக்காக மனு கொடுக்கவைத்தவர் கே.எஸ் ராதாகிருஷ்ணன். இதனால், தனது கற்பை பறிகொடுத்து தி.மு.க.வின் களங்கத்தைத் துடைக்க முயன்றவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் என்ற விமர்சனம் எழுந்தது. தி.மு.வுக்காக இந்த அளவு உழைத்த இவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்காமல் விட்டுவிட்டார்களே” என்ற ஆதங்கம் பல தரப்பிலும் எழுந்தது.
இந்த நிலையில், கே.எஸ் ராதாகிருஷ்ணன் “நான் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. விருப்பமனுவே கொடுக்கவில்லை” என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
“தன்னிலை குறிப்பு” என்ற தலைப்பில் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
“நேற்று மாலையிலிருந்து கைபேசியிலும், தொலைபேசியிலும், குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறவில்லையே என்று கேட்கப்பட்டது. நான் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை கேட்கவும் இல்லை. போட்டியிட வேண்டாம் என்று கடந்த 2015 டிசம்பரிலேயே முடிவு எடுத்துவிட்டேன். தலைவர் கலைஞர் அவர்கள் கூட என்னப்பா மனு செய்துள்ளாயா? என்று கேட்டார்.
இந்நிலையில் தேர்தலில் களப்பணி மட்டும் ஆற்றலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்பதை நண்பர்களிடம் சொன்னேன். தமிழகம் மட்டும் இல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அன்போடு என்னிடம் இதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஈழத்தில் உள்ள தமிழ் நண்பர்களும், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் அக்கறையோடு கேட்டது ஒரு அங்கீகாரம் என்று நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாழ்வில் 1972லிருந்து 44 வருடங்களில் பெருந்தலைவர் காமராஜர், பழ. நெடுமாறன், ஈ.வி.கே. சம்பத், கவிஞர் கண்ணதாசன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போன்றோரோடு அரசியல் பணி ஆற்றியதும் அதன் பின் தலைவர் கலைஞர், வைகோ அவர்களோடு என காலச் சக்கரங்கள் வேகமாக நகர்ந்துவிட்டன. சுடுமண்ணில் பயணமோ, தென்றல் பயணமோ என்று பாராமல் நிம்மதியான அரசியல் பயணமாக உள்ளது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் இதில் இயற்கையான நிலைப்பாடு ஆகும். எவ்வளவோ தமிழக அரசியல் முக்கிய நிகழ்வுகள் கண் முன் நிகழ்ந்துள்ளன. சிலவற்றை சொல்லலாம். சிலவற்றை நாகரிகம் கருதி சொல்ல முடியாது. இந்த மாதிரி அனுபவங்கள் எல்லாம் பெறுவது ஒரு அலாதியான மகிழ்ச்சிதான். பொதுவாழ்வில் சிரமங்களை சுகமான சுமைகளாக கருத வேண்டும்.
1980களிலேயே தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல்களில் மிகக் குறைவான வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. தேர்தலில் போட்டியிட்டுதான் பணிகளை செய்ய முடியுமா என்பதில்லை. தேர்தல்களில் கூட்டணிகள் இல்லாமல் பல்வேறு காரணங்களாலும் வெற்றி வாய்ப்பு தள்ளிப் போனது. அதைப் பற்றி கவலையுமில்லை. தேர்தலில் வெற்றி பெற்றா சில பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டேன் என்பது இல்லை.
1. தேசிய நதிகள் கங்கை – காவிரி – வைகை – தாமிரபரணி – குமாரி மாவட்ட நெய்யாறோடு இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1983 லிருந்து போராடி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றதெல்லாம் ஒரு சாதாரண பிரஜை என்ற அடிப்படையில்தான்.
2. தூக்குத் தண்டனை கூடாது இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல் உச்சநீதிமன்றம் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம். இது ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்த கடமையாகும்.
3. விவசாயிகளின் மீது 1975 காலகட்டங்களில் அவசர நிலை காலத்தில் ஜப்தி நடவடிக்கை கடுமையாக இருந்த நேரத்தில் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டிப்போடு நடந்துகொள்ளக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றதும் சாதாரண குடிமகனாகத்தான். அத்தோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுடைய கடன் நிவாரணத் திட்டத்திற்கும் உரிய வழக்குகள் மூலம் பரிகாரம் பெற்றதெல்லாம் ஒரு வேகத்தில் நடந்த நடவடிக்கையாகும்.
4. உயர்நீதிமன்றத்தில் கம்பம் பகுதியில் உள்ள பத்தினி தெய்வம் கண்ணகி கோட்டத்திற்கு, சித்திரா பௌர்ணமி அன்று தமிழர்கள் செல்ல உத்தரவும் பெற்றதெல்லாம் ஒரு சாதாரண வழக்கறிஞர் என்ற நிலையில்.
5. சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றதும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் அல்ல.
6. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு விற்பதை தடுத்ததும் தற்போது ஜெயலலிதா ஆட்சியிலும் இதே நடவடிக்கையை உயர்நீதிமன்றம் மூலமாக தடுத்து நிறுத்தியதும் அடியேன்தான். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடைய எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது.
7. உச்சநீதிமன்றத்தில் சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று பொதுநலத்தோடு அணுகியதும் சாமானியன் என்ற அடிப்படையில்தான்.
8. கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் சுற்றுச்சூழல் பாதித்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்து 1988 காலகட்டம் மற்றும் 2011 லும் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ததும் அடியேன்தான்.
9. காவிரி பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறிலும் எடுத்துக்கொண்ட பொறுப்புகள் எல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன.
10. தேசிய மனித உரிமை ஆணையத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் எந்தவிதமான சட்டப்பாதுகாப்பும் இல்லாத 100க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உரிய வழக்குகளை நடத்தி அவர்களை வெளியே வர முயற்சிகளையும் மேற்கொண்டதெல்லாம் சாதாரண விஷயமல்ல.
இப்படி பல நடவடிக்கைகள், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாரகன் வழக்கு, தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மனித உரிமை ஆணையத்திடம் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. தோழர்கள் அத்தனைபேரையும் விடுதலை செய்தது, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதில் அடிப்படை காரணமாக இருந்ததும் அடியேன்தான்.
தமிழக உரிமைகள், தமிழக நீர் ஆதாரப் பிரச்சினைகள், மனித உரிமைகள், பொதுநலன் என்ற வழக்குகள் எல்லாம் இப்படி நீண்ட பட்டியலே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதை சொல்லலாம். இது புகழுக்காகவோ, தனிப்பட்ட சுயநலத்துக்காகவோ செய்யவில்லை. அப்போதெல்லாம் இன்றைக்குள்ள ஊடக வசதிகள் இல்லை. இந்த செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் மட்டும்தான் வரும்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பெல்லாம் இயற்கையாக வரவேண்டும். அந்த வகையில் நண்பர்களும், தோழர்களும் என் மீது உள்ள அக்கறையில் விருப்பப்படுவதும், அது குறித்து விசாரிப்பதும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நம்முடைய களப்பணிகள்தான் வரலாற்றில் நிற்கும். நமக்கு கிடைக்கின்ற பதவிகள் சில காலம் இருக்கும் சில காலம் போகும். அதைவிட கடமைகளும், உணர்வுகளும்தான் முக்கியம். இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் விமான நிலையத்திலேயோ, ரயிலிலேயோ பயணத்தில் சந்திக்கும்போது, என்ன கே.எஸ்.ஆர். உங்களுக்கு வரவேண்டிய உரிய அங்கீகாரம் வரவில்லையே என்று சொல்லும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது. பல தலைவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். என்னிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆகிவிட்டார்கள். அவர்களை பற்றி யாராவது இது மாதிரி விசாரிப்பது உண்டா? உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் வரவேற்க தமிழ் சகோதரர்கள் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி இயற்கையாக அங்கீகரித்து வரவேண்டும். வரும்போது வரட்டும். அது முக்கியமல்ல.
நட்பால், அன்பால் என் மீது அக்கறையில் விசாரித்த அத்தனைப் பேருக்கும் நன்றி.
For men may come and men may go,
But I go on for ever.
– Alfred Lord Tennyson
The woods are lovely,
dark and deep.
But I have promises to keep,
and miles to go before I sleep.
– Robert Frost
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போலே – நான்
வீழ்வேன் என்று நினைத் தாயோ?!
– பாரதி”
– இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதி உள்ளார்.