admk1
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றி நாளுக்கு நாள் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. புகார் மனுக்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வரும் அதிமுக தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வேளச்சேரி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நீலாங்கரை முனுசாமி மீது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதிக்கு வி.பன்னீர் செல்வம் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.
அவர் கலசப்பாக்கம் தொகுதியை சார்ந்தவர் கிடையாது என்றும், விருப்பமனுவில் தவறான தகவல்களை அளித்து பட்டியலில் இடம்பெற்றதாகவும் கூறி அதிமுக நிர்வாகிகள் பலர் போயஸ்தோட்டத்தில் புகார் அளித்துள்ளனர். அதனால், கலசப்பாக்கம் தொகுதி வேட்பாளர் பன்னீர் செல்வத்தை மாற்றி அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி தொகுதியில் போட்டியிட நரசிம்மன் என்பவருக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது. இது, அப்பகுதி அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரை அதிருப்தி அடைய செய்துள்ளது. மக்களிடம் செல்வாக்கு இல்லாத திருத்தணி வேட்பாளரை மாற்றாவிட்டால் தீக்குளிக்கவும் தயாராக உள்ளதாக வேதனை தெரிவித்தனர் அதிமுக நிர்வாகிகள்.
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பால்ராஜ் என்பவரை மாற்றக்கோரி, அவரது வீட்டின் அருகே இருக்கும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் புகார் காரணமாக ஏற்கனவே 6 முறை வேட்பாளர்களை அதிமுக தலைமை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.