Lotteries
கர்நாடக மாநிலத்தில் 2007-ம் ஆண்டில் லாட்டரி விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும், அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் மாநிலத்தில் லாட்டரி விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
இந்த ஊழல் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘’எஸ். மார்ட்டின் மற்றும் என்.ஜெயமுருகன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கோவை நகரில் உள்ள டாய்சன் லேண்ட் அண்ட் டெவலப்மெண்ட், சார்லஸ் ரியால்டர்ஸ், மார்ட்டின் மல்டி புரொஜெக்ட்ஸ், டாய்சன் லக்சுரி வில்லாஸ் ஆகிய 4 நிறுவனங்களும் லாட்டரி ஊழலில் தொடர்புடைய மார்ட்டினுக்கு சொந்தமானவை என்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. மேலும், அமலாக்கத் துறையின் விசாரணையில் இவை அனைத்துமே லாட்டரி ஊழல் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் என்பதும் தெரிய வந்தது. எனவே இந்த 4 நிறுவனங்களின் ரூ.122 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் முடக்கி வைக்கப்படுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது.