ஓட்டுனர் இல்லாமல் டெல்லி மெட்ரோ ரயில்
டெல்லி மெட்ரோ மூன்றாவது மெட்ரோ வழித்தடத்தை இந்த வருடத்திற்குள் முடிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி ரயிலை டெல்லி மெட்ரோ வரும் ஜுலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரயிலை இயக்குவதற்கான ஓட்டுநர் இருக்கையில் மனிதருக்குப் பதில் சென்சார் மற்றும் கேமரா கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இது தற்போது சோதனை முறையில் இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக டெல்லி மெட்ரோவின் தலைமை இயக்குநர் மஞ்சு சிங் கூறியதாவது:-
இதற்காக பிரத்யேகமாகச் வடிவமைக்கப்பட்ட புதிய ரயில் பெட்டிகள் முகுந்த்பூர் பணிமணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் அனைத்தும் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படக்கூடியதாகும். இதற்கான சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். இது முடிந்த பிறகு, இந்த ரயிலை ஜாக்புரி மேற்கு முதல் பொட்டானிக்கல் கார்டன் வரை ஜுலை 1ம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிறகு ஐடிஓ முதல் காஷ்மீர் கேட் பகுதி வரையிலும், பின்னர் முகுந்பூர் முதல் சிவ் விஹார் வரையிலும் இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
மேலும் இதில் வை-பை வசதி, அமர்வதற்கு அகன்ற இடவசதி, பயண வழித்தடத்தை எல்இடி திரை மூலம் அறிந்து கொள்ளும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலம் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ரயில்கள் செயலாக்க அறையிலிருந்து இயக்கப்படும். ஓட்டுனர் இல்லா ரயில்கள் செயலாக்க அறைகளிலிருந்து அதன் பயணம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.