tmc

சென்னை:  

மிழ் மாநில காங்கிரஸ் கட்சியை விட்டு, அதன் பொதுச் செயலாளர் தாம்பரம் நாராயணன் விலகினார்.

கடந்த சில நாட்களாக ம.தி.மு.கவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்து, மாநில பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணன்  ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் துவக்கினார் ஜி.கே.வாசன். அப்போதிலிருந்தே முக்கிய பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டு, உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவதாக செய்திகள் வந்தபடி இருந்தன.

இந்த நிலையில்  கடந்த மே 22-ந் தேதி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை  ஜி.கே.வாசன் அறிவித்தார்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ் பி.எஸ்.ஞானதேசிகன், ஆகியோர் மூத்த துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் தவிர, 9 துணைத் தலைவர்கள், 20 பொதுச் செயலாளர்கள், 32 செயலாளர்கள், 32 இணைச் செயலாளர்கள், 25 கொள்கை பரப்புச் செயலாளர்கள், 70 செயற்குழு உறுப்பினர்கள், 14 அணிகளின் தலைவர்கள், 75 மாவட்டத் தலைவர்கள் என 377 பேருக்கு பதவி அளிக்கப்பட்டது.

இதன் பிறகும் பலர், தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என வாசனிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.   இந்த நிலையில் மாவட்டங்களை மூன்றாக  பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.நெடுஞ்செழியன் கடந்த ஜூலை 12-ந் தேதி த.மா.கா.வில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

தற்போது த.மா.கா. மாநிலப் பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணனும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நேற்று ஜி.கே.வாசனுக்கு அனுப்பினார்.

தனது ராஜினாமா  குறித்து தாம்பரம் நாராயணன் கூறியதாவது:

“கட்சி ஆரம்பித்த மூன்று மாதங்களிலேயே த.மா.கா.வில் மூன்று கோஷ்டிகள் உருவாகிவிட்டன. கோவை தங்கம், ஞானசேகரன், விடியல் சேகர் ஆகியோர் மூவர் அணியாக செயல்படுகிறார்கள். கட்சிக்கு உழைப்பவர்களை எல்லாம் வெளியேற்றி வருகின்றனர்.

தமிழக வரலாற்றிலேயே ஐநூறுக்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் நியமித்த கட்சி த.மா.கா. மட்டுமே. கூட்டணிக்காக மற்ற கட்சிகள் தேடி வரும் வகையில், விஜயகாந்த் கட்சி நடத்துகிறார். ஆனால், கூட்டணிக்கு ஒரு கட்சியை மட்டுமே வாசன் நம்பியிருக்கிறார்” – இவ்வாறு தாம்பரம் நாராயணன் தெரிவித்தார்.

அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று அரிசயல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.