புதுவை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலையில் தீவிரமாக ஈட்டுள்ளன. புதுச்சேரியை பொறுத்தவரை திராவிட கட்சிகள், அகில இந்திய கட்சிகள் கூட்டணி தொடர்பாக தமிழகத்திலேயே இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை புதுவையிலேயே முடிவு எடுக்கும் சக்தி உள்ளது. அதாவது அந்த கட்சியின் இறுதி முடிவினை முதலமைச்சர் ரங்கசாமியே எடுக்கலாம். ஆனால் அவர் தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவித முடிவும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.
என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி இந்த சட்டமன்ற தேர்தலிலும் அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. சார்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக ஆட்சியில் பங்கு என்பது எழுத்துப்பூர்வமாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிபந்தனைகளை என்.ஆர்.காங்கிரஸ் ஏற்கவில்லை.
இதைத்தொடர்ந்து புதுவையில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 30 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு அ.தி.மு.க. தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணி கைவிட்டு போன நிலையில் தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் புதுவையிலும் அதே கூட்டணிதான் அமையும். இத்தகைய சூழலில் தனித்துபோட்டியிடவும் என்.ஆர்.காங்கிரஸ் தயாராகி வருகிறது.