பழம்பெருமை வாய்ந்த பேலார் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது.
அங்கு இம்மாத தொடக்கத்தில் நடந்த ஒரு ருசிகரமான சம்பவம் மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பேலோர் பல்கலைக்கழகத்தில், 33-வயது மாணவி கேட்டி ஹம்ப்ரே என்பவர் அவரது 4 மாத மகள் மில்லியை, தனது குழந்தைக் காப்பாளர் சம்பவத்தன்று வேலைக்கு வராத காரணத்தால், தனது வகுப்பிற்கு அழைத்து வந்தார் என டுடே.காம் பதிவிட்டுள்ளது.
சுகாதாரம் , மனித செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் டாரின் வில்லபி தனது விரிவுரையின் போது 4 மாத குழந்தை மில்லி அழுவதைக் கவனித்தவர், ஹம்ப்ரே கவலையும் மன அழுத்தமுமின்றி பாடம் கவனிக்க வேண்டும் என்பதற்காக தான் பாடம் எடுத்த நேரம் முழுவதும் குழந்தையைத் தானே தூக்கி வைத்துக்கொண்டிருந்தார் என்று KWTX பதிவிட்டுள்ளது.
“மாணவி சங்கடப்படுவதை நான் விரும்பவில்லை.ஏனெனில் இதில் சங்கடப்பட எதுவும் இல்லை,” என்று வில்லபி KWTX க்கு கூறினார் .
திட்டங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் வகுப்பிற்கு செல்வது ரத்தாகி விடக்கூடாது என்றும் அதனால் குழந்தையை தன்னுடன் அழைத்து செல்லலாம் என்றெண்ணி அதை தன்னால் செய்யமுடியும் என்ற மனோதைரியத்தை அவர் மரைன் கார்ப்ஸில் வேலை செய்த போது உருவாக்கிக்கொண்டதாகவும் உடற்பயிற்சி உடற்செயலியலில் பட்டப்படிப்பு பயில்கின்ற ஹம்ப்ரே கூறினார். ஆகையால் இரண்டையும் சமாளிக்க முடியும் என்று நம்பி குழந்தையையும் வகுப்பிற்கு உடனழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்ததாக ஹம்ப்ரே கூறினார்.
ஆனால் அங்கு சென்ற பிறகு குழந்தைத் தன் தாயைத் தொந்தரவு செய்யவும், அடுத்த 55 நிமிடங்களுக்கு பேராசிரியர் வில்லபி அதனை சுமந்துகொண்டு பாடம் நடத்தினார்.
மேலும் அவர் “நான் இதை எனக்காக செய்யவில்லை. என் மாணவர்கள் மீது பொறுப்பும் அக்கறையும் உள்ள காரண்த்தால் செய்தேன்” என்று கூறினார்.
இந்த செய்கையினால், பெற்றோர்களாகிய தங்கள் மாணவர்களின் தேவைகளை புரிந்து கொண்ட ஆசிரியரின் பட்டியலில் வில்லபி சேர்கிறார். கடந்த மே மாதம், ஹீப்ரு பல்கலைக்கழக பேராசிரியர் சிட்னி ஏன்ஜல்பர்க் என்பவர் விரிவுரை நடத்திக் கொண்டிருக்கும் போது தனது மாணவரின் குழந்தையை வைத்திருக்கும் புகைப்படம் மிகவும் பிரசித்திபெற்றது. அந்த மாணவர் தனது குழந்தையை அழ தொடங்கியதால் வகுப்பை விட்டு வெளியேற தயாராக இருந்தபோது ஏன்ஜல்பர்க் அக்குழந்தையை எடுத்து சமாதனப்படுத்தினார்.
அந்த சம்பவத்தைப் போலவே பேலோர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவமும் எல்லோர் மனதையும் கவர்ந்தது. பாடத்திட்டத்தில் இல்லையென்றாலும், பணம், படிப்பு,வசதி வாய்ப்பை விட மனிதாபிமானமே சிறந்தது என கற்றுக்கொடுத்திருக்கிறார் வில்லபி அவர்கள்.