சென்னை:
தங்கள் அணியை எதிர்த்துப் போட்டியிடும் விஷால் அணியினர் பொய்யர்கள் என, நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் ஒரு தர்மயுத்தம் என்றும், நீதியை நிலைநாட்ட தங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு நலிந்த கலைஞர்கள், நாடக சங்கத்தினர்கள் உள்ளிட்டோர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“2015-18-ம் ஆண்டுகளுக்கான நடிகர் சங்க தேர்தல் 15.07.2015 அன்று நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ந்தேதி தலைவரான நானும், பொது செயலாளரான ராதாரவியும் அறிவித்தோம். நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் ஹைகோர்ட்டில் தேர்தலுக்கு தடை உத்தரவு வாங்கினார்கள்.
ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி மேற்பார்வையில் சங்கத்தின் தேர்தலை நடத்துவது நல்லது என்ற தலைமை நீதிபதி ஆலோசனை தெரிவித்தார். அதை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொண்டோம். மேற்கண்ட உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட தேர்தல் கமிஷனர் நீதிபதி ஈ.பத்மனாபன் தேர்தல் தேதி, நடைபெறும் இடம் மற்றும் அட்டவணையை அவரே முடிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித அப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ரகசிய வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தலில் போட்டியிட நினைப்பவர்கள் போட்டியிடட்டும். எங்கள் அருமை பெருமைகளை உணர்ந்த உறுப்பினர்கள், எங்கள் தொப்புள் கொடி உறவுகள், எங்கள் ரத்தத்தின் ரத்தங்களான எங்கள் உயிர் மூச்சான நடிகர்-நடிகைகள் இந்த தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
ஆறு ஆண்டு காலம் பொதுச்செயலாளராக செயல்பட்டு நடிகர் சங்க கடனை அடைப்பதில் பெரும் பங்கு வகித்தேன். 9 ஆண்டு காலமாக எனது தலைமையில் நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறது என்பதை உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். போற்றுவார் போற்றினும், தூற்றுவார் தூற்றினும் எனது தலைமையிலான நிர்வாகம் கடமையை செய்ய தவறியதில்லை.
பொய்யான புகார்களை தெரிவிப்பவர்கள் உண்மையை உணர்ந்துகொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற நினைப்பில் இருப்பவர்கள் சில தவறான நெறிமுறைகளை பின்பற்றுகிறார்கள். எங்கள் உறுப்பினர்கள் அனைவரும் மனசாட்சி உள்ளவர்கள். உண்மையாக உழைப்பவர்கள். உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள்.
நாங்கள் செய்த சங்கப்பணிகளுக்கு மதிப்பளிப்பவர்கள். இந்த தேர்தலை தள்ளிப்போட்டு நடத்தவிடாமல் செய்ய நினைத்தவர்களுக்கும், ஜனநாயக முறையில் தேர்தலை காலம் தவறாமல் நடத்தவேண்டும் என்று அரும்பாடுபட்ட எங்களுக்கும் நடக்கும் தர்ம யுத்தம். நீதியை நிலை நாட்ட எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு!’
இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.