தமிழ் திரைப்பட செய்தித்தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் ( வயது 90) இன்று சென்னையில் காலமானார். அவரது உடல் ராயப்பேட்டையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலையில் உடன் தகனம் நடைபெறுகிறது.
ஆனந்தன் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரையுலகினரும், பிற துறையினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தகவல்களஞ்சியமாக விளங்கி, தமிழ் சினிமாவை பற்றிய அரிய தகவல்களை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் அளித்து வந்தார். ‘’சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு’’ என்று பேசும்படங்கள் துவங்கியது முதல் கடந்த 2000ம் ஆண்டு வரை உள்ள தமிழ் சினிமாவை பற்றிய குறிப்புகளை குறிப்பிட்டிருந்தார். 1991ல் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் ( பி.ஆர்.ஓ.) இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது அவருக்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்றியவர் ஆனந்தன். எம்.ஜி.ஆர். இயக்கி,நடித்து, தயாரித்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் மக்கள் தொடர்பாளர் ஆனார் ஆனந்தன்.