செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக நினைவக (Memory) சிப் தேவை அதிகரித்துள்ள நிலையில், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் 2026-ஆம் ஆண்டில் பெறும் லாபம், கடந்த 40 ஆண்டுகளில் சம்பாதித்த மொத்த லாபத்தையும் மிஞ்சும் என தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் செமிகண்டக்டர் (Semiconductor) பிரிவு தலைவர் கிம் யோங்-க்வான், 2026-ஆம் ஆண்டில் அந்தப் பிரிவு பெறும் செயல்பாட்டு லாபம் கடந்த பல தசாப்தங்களின் மொத்த வருவாயை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் 2026 இரண்டாவது காலாண்டு செயல்பாட்டு லாபம் 85.5 டிரில்லியன் தென் கொரிய வான் (சுமார் 5.32 லட்சம் கோடி ரூபாய்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 18 மடங்கு அதிகமாகும்.

மேலும், 2026 முதல் காலாண்டில் மட்டும் சாம்சஙின் செயல்பாட்டு லாபம் 756 சதவீதம் உயர்ந்து 57.2 டிரில்லியன் வானாக அதிகரித்துள்ளது. இதில் 94 சதவீத லாபம் AI பயன்பாடுகளுக்கான நினைவக சிப்கள் விற்பனையிலிருந்தே கிடைத்ததாக கூறப்படுகிறது.

உலகளவில் AI தரவு மையங்கள் மற்றும் உயர் திறன் கணினி அமைப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், உயர் வேக நினைவக (HBM) சிப் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சாம்சங் பெரும் பலன் அடைந்து வருகிறது.

இந்த வளர்ச்சி தொடர்ந்தால், ஒரு காலாண்டில் கிடைக்கும் லாபத்தில் ஆப்பிள் மற்றும் என்விடியா போன்ற முன்னணி நிறுவனங்களையும் சாம்சங் முந்தும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

[youtube-feed feed=1]