பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அயோத்தியில் 15,000 சதுர அடி நிலம் வாங்குவதற்காக மறுநாளே ₹15 கோடி பணத்தை அனுப்பியதாக ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அபிநந்தன் லோதா தெரிவித்துள்ளார்.

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்தியா நெக்ஸ்ட் ரியல் எஸ்டேட் உச்சி மாநாடு 2026’ நிகழ்ச்சியில் பேசிய அவர், “2023-ல் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, அமிதாப் பச்சனிடமிருந்து அழைப்பும், ‘இது அமிதாப் பச்சன். நேரம் கிடைக்கும்போது திரும்ப அழைக்கவும்’ என்ற குறுஞ்செய்தியும் வந்தது. உடனே அவரைத் தொடர்புகொண்டேன். அப்போது, ‘நான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். புனித நகரமான அயோத்தியில் நிலம் வாங்க விரும்புகிறேன்’ என்று அவர் கூறினார்” என்றார்.

“15,000 சதுர அடி நிலத்தின் விலை ₹15 கோடி என தெரிவித்தேன். அதற்கு மறுநாளே அமிதாப் பச்சன் ₹15 கோடியை அனுப்பிவைத்தார்” என்றும் லோதா கூறினார்.

மேலும், 2026 மார்ச் மாதத்தில் அமிதாப் பச்சன், அபிநந்தன் லோதா நிறுவனத்திடம் இருந்து ₹35 கோடி மதிப்பில் 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நிலம், அயோத்தியில் அவர் மேற்கொண்ட மூன்றாவது முதலீடாகக் கூறப்படுகிறது.

அயோத்தி குறித்து பேசிய அபிநந்தன் லோதா, “நிலம் என்பது வெறும் சொத்து அல்ல; அது ஒரு பாரம்பரியம். அயோத்தியில் அந்த பாரம்பரியத்துடன் நம்பிக்கையும், மரபும் இணைந்துள்ளன. தொடர்ந்து நடைபெறும் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் முதலீடுகள் காரணமாக, நீண்டகால முதலீட்டுக்கும் மதிப்பு உயர்வுக்கும் அயோத்தி சிறந்த இடமாக உருவெடுத்து வருகிறது” என்றார்.

[youtube-feed feed=1]