சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது எதிர்த்து, ஐ.பெரியசாமி, அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2006-2011 காலத்தில் மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி ஆட்சி காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவிவகித்த ஐ.பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்சஒழிப்பு போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திரா உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் எம்எல்ஏ அலுவலகங்களில் சோதனை நடத்தி சொத்து ஆவணங்கள், முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்களை பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கம் செய்வது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் பிறப்பித்தது.
இதனை ரத்து செய்யக் கோரியும், அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர்கள் ரித்துராஜ் பிஸ்வாஸ் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது பெரியசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆஜராகி, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், அமலாக்கத் துறை வழக்கு விசாரணை விஜய் மதன்லால் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என வாதிட்டார்.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, தங்களது மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி அளிக்கும் பெரியசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
[youtube-feed feed=1]