சென்னை: தமிழ்நாட்டில், பிளாஸ்டிக் கவரில் தேநீர் மற்றும் உணவுபொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருவதால், பல்வேறு நோய்கள் வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மக்காத பிளாஸ்டிக்குகளான கேரி பேக் எனப்படும் பிளாஸ்டிக்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அரசு மற்றும் அதிகாரிகள் துணையுடன் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை கனஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் உணவு பொருங்களும், சுடச்சுட பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் உருவாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளில் சூடான தேநீர் (டீ, காபி) மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க உத்தரவிடக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்றது.
வழக்கின் கடந்த விசாரணையின்போத மனுதாரர் தரப்பில், பிளாஸ்டிக் கவர்களில் சூடான திரவங்களை ஊற்றும்போது, அவற்றில் உள்ள ‘பிஸ்பினால்-ஏ’ (Bisphenol-A) எனும் மைக்ரோ பிளாஸ்டிக் வேதித்துகள்கள், கர்ப்பிணியின் நஞ்சுக்கொடி வழியாகக் கருப்பைக்குள் சென்று, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தனியார் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ தாக்கம் உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பின்வரும் துறைகளுக்கு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். மேலும், இதுதொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறைச் செயலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர். உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் வனத்துறை சிறப்பு அரசு வழக்குரைஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.
“மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனித ஆரோக்கியத்திற்குப் பாதகம் உள்ளதா என்பதை ஆராய சென்னை ஐஐடி-யின் (IIT Madras) உதவியை நாடியுள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு தரப்பிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சூடான உணவுகளைப் பிளாஸ்டிக் கவர்களில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
[youtube-feed feed=1]