ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளிலேயே முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு (Cricket Australia) பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரேலிய வாரியத்தின் கணக்கையும் குலைத்துவிட்டது.
ஐந்து நாட்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிந்ததால், சுமார் ஆஸ்திரேலிய டாலர் 10 மில்லியன், இந்திய மதிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் வரையிலான வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்றாம் நாளுக்காக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர். இதில் மட்டும் இங்கிலாந்திலிருந்து வந்த ரசிகர்களே 20 ஆயிரம் பேர். ஆனால் போட்டி சீக்கிரமே முடிந்ததால், டிக்கெட் பணம் திருப்பி வழங்க வேண்டிய நிலை. அதோடு, உணவு, பானங்கள், ஜெர்சி, நினைவுப் பொருட்கள் விற்பனை எல்லாம் ‘டக் அவுட்’ ஆகிவிட்டது.
இதுகுறித்து Cricket Australia தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க் நையாண்டியாகவே கூறியுள்ளார்.
“ஒரு வரியில் சொன்னால், சுருக்கமான டெஸ்ட் போட்டிகள் வியாபாரத்துக்கு நல்லதல்ல. இதைவிட நேரடியாக சொல்ல முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இதுவரை பிட்ச் தயாரிப்பில் அதிகமாக தலையிடாமல் இருந்தோம். ஆனால் இப்படிப்பட்ட போட்டிகளைப் பார்த்தால், விளையாட்டை விட வணிக பாதிப்பு தான் அதிகமாக தெரிகிறது” என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியும் இரண்டு நாளிலேயே முடிந்தது. அதனால் மட்டும் Cricket Australia-க்கு சுமார் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்.
பொதுவாக டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் வரை நடைபெறும்; குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது நீடிக்கும். ஆனால் இரண்டு நாளில் முடிவது அபூர்வம். இந்தப் போட்டியில் முதல் நாளிலேயே 21 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இரண்டாவது நாளில் மேலும் 16 விக்கெட்டுகள் விழ, இங்கிலாந்து அணி 175 ரன்களை எளிதாக சேசிங் செய்து தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதனால் ரசிகர்கள் “போட்டி ரொம்ப சுவாரஸ்யம்… ஆனால் வாரியத்துக்குத் தான் ரொம்ப கசப்பு” என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]