அசாமில், மிகவும் அரிதான ஒரு சம்பவத்தில், ராஜநாகம் கடித்த ஒருவர் சிகிச்சை மற்றும் திறமையான குழுப்பணி காரணமாக உயிர் பிழைத்துள்ளார்.

இந்த சம்பவம், ராஜநாகம் கடித்த பிறகு உயிர் பிழைத்ததாக அசாமில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாகும்.

தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் ராஜநாகம் கடித்து வெகு சிலரே உயிர்பிழைத்துள்ளனர் பெருபாலான நிகழ்வுகள் உயிரிழப்பில் முடிந்துள்ளன.

ராஜநாகக் கடி மிகவும் அரிதானது, மேலும் அந்த குறிப்பிட்ட இனத்திற்கான விஷமுறிவு மருந்து இல்லாததால், அதன் விளைவுகள் பெரும்பாலும் மோசமாகவே இருக்கும்.

அசாமின் காம்ரூப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணிக்கு புதர் ஒன்றின் அருகே வேலை செய்து கொண்டிருந்த ஆண் அவரை அறியாமல் பாம்பின் தலையைப் பிடித்துள்ளார். இதில் அந்த பாம்பு அவரது வலதுகை உள்ளங்கையில் கடித்துள்ளது.

முதலில் கடிபட்ட இடத்தில் மட்டும் லேசான வீக்கம் இருந்ததை அடுத்து மருத்துவமனைக்குச் செல்ல தயங்கிய நிலையில் பின்னர் வலியும் வீக்கமும் படிப்படியாக அதிகரித்ததை அடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அதேநேரத்தில் தன்னை பாம்பு கடித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பாம்பைப் பிடித்து ஒரு பைக்குள் போட்டு கட்டியுள்ளார்.

மதியம் 1 மணியளவில் காம்ரூப்பில் உள்ள பமுனிகான் மாதிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவருக்கு

படிப்படியாக அதிகரித்து வந்த அறிகுறிகளைப் பார்த்த மருத்துவக் குழு ராஜநாகக் கடி விஷம் என்று சந்தேகிக்கப்பட்டதால், 20 குப்பிகள் பலவகை பாம்பு விஷமுறிவு மருந்து (ASV) செலுத்தினர்.

மேலும், மருத்துவமனைக்கு வந்தபோது நரம்புகளில் விஷம் எறியதற்கான அறிகுறிகள் இல்லாததால் மாதிரி மருத்துவமனையிலேயே சிகிச்சையைத் தொடர அறிவுறுத்தப்பட்டது.

அதேவேளையில் பிடித்து வைத்திருந்த பாம்பின் புகைப்படத்தைப் பார்த்த பயிற்சி பெற்ற பாம்பு மீட்பு வீரர்கள் மதியம் 2 மணியளவில், அந்தப் பாம்பு ராஜநாகம் என்று உறுதி செய்தனர்.

இதனையடுத்து நோயாளி அவசரமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள் கொண்ட கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (GMCH) க்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

அங்கு அவரை இரவு முழுவதும் கண்விழித்து கவனித்து வந்த மருத்துவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக, வலி மற்றும் வீக்கம் தவிர நரம்புகளில் விஷம் எதுவும் எறியதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சரியான நேரத்தில் தகவல் தரப்பட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் ராஜநாகக் கடியில் இருந்து அவர் உயிர்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ICMR தேசியப் பணிக்குழு ஆய்வின் இடைக்கால அறிக்கையின் தரவுகளின்படி, ஆவணப்படுத்தப்பட்ட பாம்புக்கடி இறப்புகளில் தோராயமாக 40 சதவீதம் வீடுகளிலேயே நிகழ்ந்துள்ளன. இவர்கள் பெரும்பாலும் முறையான சுகாதார சேவைகளை நாடாமல், மாற்று மருத்துவ முறைகளை நம்பியிருந்த நபர்கள் ஆவர்.

எனவே, பாம்புக்கடி, விஷக்கடிக்கான சிகிச்சை நாடுவதைத் தாமதப்படுத்தக் கூடாது என்று அம்மாநில சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.

[youtube-feed feed=1]