டெல்லி: பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா  கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில்,  கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா, 2025 போன்ற சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சரை கைது செய்து 30 நாட்கள் காவலில் வைத்திருக்கும் எந்தவொரு பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சரையும் பதவியில் இருந்து நீக்க முடியும். அதற்காக அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா, 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2025, மற்றும் யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா, 2025 ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 20 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் .

இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து,  இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் 15 பாஜக எம்பிக்கள். எதிர்க்கட்சிகளை சேர்ந்த 4 எம்பிக்கள் உட்பட 31 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டுக் குழுவின் காலஅவகாசம் விரைவில் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், இந்த கூட்டுக் குழுவின்  அவகாசத்தை நீட்டிக்கக் கோரி அபராஜிதா சாரங்கி சார்பில் மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் நேற்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி கூட்டுக் குழு தனது அறிக்கையை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி வாரத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் கூட்டுக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]