சென்னை: தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும் என அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது என்றார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கிறிஸ்தவ மக்களை பெருமைப்படுத்தும் விதமாக அ.தி.மு.க. சார்பில் கடந்த 20 ஆண்டாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
ஓட்டுக்காக மட்டுமே சிறுபான்மை நலனைப் பற்றி பேசும் தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவிக்கும் கட்சி. தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும். ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீயசக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார்.
சிறுபான்மை பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கும், சிறுபான்மை மக்களின் வாக்குகளை தந்திரமாக பெறுவதற்கும் கபட நாடகம் ஆடுகிறது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எங்கள் கொள்கையில் நாங்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்போம். அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இருந்ததில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சாதி, மதம், இன மோதல்கள் இருந்ததில்லை” என்றார்.
தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசிய அவர், “அதிமுகவின் கூட்டணி கொள்கை என்பது தேர்தல் சமயத்தில் கட்சிகளுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் மட்டும்தான் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. சிறுபான்மையின மக்கள் இதை அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தது. ஆனால், இப்போது பொய் வாக்குறுதிகளை அளித்து சிறுபான்மை மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு என்று எந்தவொரு நன்மையும் செய்யாமல், வாய்ச்சவடால் பேசி வாக்குகளை மட்டும் பெறக்கூடிய தந்திரவாதிகள் திமுகவினர்.
எனவே தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், திமுக ஒரு ‘தீயசக்தி’, மக்கள் விரோத ஏமாற்ற பேர் வழி என்று அப்போதே அடையாளப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் அந்த தீய சக்தியை எதிர்த்தார். எனவே சிறுபான்மை மக்கள் வருகிற தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதிமுகவுக்கு முழு ஆதரவு தரவேண்டும். அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். திமுக ஆட்சி என்பது வெறும் விளம்பர மாடல் ஆட்சிதான். விடியல் இல்லா, மக்களுக்கு எதிரான, மக்களை ஏமாற்றும் ஆட்சி” என்று விமர்சனம் செய்தார்.
தி.மு.க. எனும் தீய சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போராடினார். தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பாடுபடும் இயக்கம் .
இவ்வாறு கூறினார்..
[youtube-feed feed=1]