சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன், அமைச்சர்கள் வரும் 22ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் மற்றும், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் கடந்த இரு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் டிசம்பர் 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22-ந்தேதி அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் “பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இது தாமதமானது. இதனால் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தன.
இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்தார். இக்குழுவின் பணி, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), தற்போதைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த தீர்வைப் பரிந்துரைப்பதாகும்.
ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு இக்கோரிக்கையை மிகவும் ஆழமாக ஆய்வு செய்துள்ளது. சுமார் 194 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் 9 சுற்றுகளாக விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. எல்.ஐ.சி (LIC) உள்ளிட்ட முக்கிய நிதி நிறுவனங்களுடன் கலந்தாலோசனை செய்து நிதி மேலாண்மை குறித்த தரவுகள் திரட்டப்பட்டன. சுமார் 7.36 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 6.75 லட்சம் ஓய்வூதியதாரர்களின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் (டிசம்பர் 17) அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழு கூடி, ககன்தீப் சிங் பேடி சமர்ப்பித்த பரிந்துரைகளை ஆய்வு செய்தது.
அரசின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் எந்தத் திட்டம் சாத்தியமானது என்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி, ஊதிய உயர்வு மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், “உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம்” என்பதே ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
ககன்தீப் சிங் பேடி குழு தனது இறுதி அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் தாக்கல் செய்ய உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையிலான இந்த நீண்ட காலப் போராட்டத்திற்கு இந்த அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையால் முடிவு எட்டுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு