சென்னை: திருவள்ளுர் அருகே  பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவனுக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் அழுவாரா?    என தமிழ்க எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

கரூர் தவெக நிகழ்ச்சியில் 41 பேர் உயிரிழந்த சோகத்தின்போது கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் குலுங்கி குலுங்கி அழுத சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அவரது தலைமையின் கீழ் உள்ள பள்ளிக்கல்வித்துறைன் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்காக அவர் அழுவாரா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

‘மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசு, பாராட்டு விழா நடத்திய செலவில் பள்ளிகளை சீர்செய்திருக்கலாமே – எடப்பாடி பழனிச்சாமி‘

அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த மாணவனுக்காக அழுவாரா? இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? த.வெ.க

பெற்றோர் வயிற்றில் இடியை இறக்குவது தான் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமா? நயினார் நாகேந்திரன்

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில், இன்று மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள், பள்ளியில் வளாகத்தில் உள்ள நடைமேடையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, நடைமேடையை ஒட்டியிருந்த கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், உணவருந்திக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவர் மோகித் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களை அனுப்பி வைத்தனர்.

இந்த சோக சம்பவத்துக்கு திமுக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,   “திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா? பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,   ‘திருவள்ளூர் மாவட்டத்தில் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்குகிறது.

படித்து முன்னேற வேண்டும் என்னும் நம்பிக்கையில் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினால், பிள்ளைகளின் தலையில் சுவரை இடிந்து விழச் செய்து, பெற்றோர் வயிற்றில் இடியை இறக்குவது தான் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமா?

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று பிரம்மாண்டமாக விழாக்களை நடத்தத் திராணியிருக்கும் திமுக அரசுக்கு அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மனமில்லை என்பது எவ்வளவு கேவலமானது?

இன்னும் எத்தனைப் பிஞ்சு உயிர்களைக் காவு வாங்கினால் திமுக அரசின் விளம்பர மோகம் முற்று பெற்று, மாணவர்களின் நலன் மீது அக்கறை வரும்?

அரசுப் பள்ளி மாணவர்களின் உயிரோடு விளையாடிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோரின் கைகளில் உள்ள இந்த ரத்தக் கறையை இனி எத்தனை விளம்பர நாடகங்களைக் கொண்டும் துடைத்தெறிய முடியாது.

அலட்சியப் போக்காலும், திறனற்ற நிர்வாகத்தாலும் ஏழை எளிய மாணவர்களின் உயிரைப் பறித்துவிட்டு, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் வரவிடாமல் தடுத்துவிட்டு, “அப்பா” என்னும் நாடகம் போடும் இந்தப் பாவம் திமுக அரசை சும்மா விடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

தவெக சார்பில், தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் விடுத்துள்ள  கண்டன அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவக் குழந்தை மரணமடைந்த செய்தி இதயத்தை இடியென தாக்குகிறது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என தனியார் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாட்டாளர்களை வைத்து ஷோ காட்டிய பணத்தை வைத்து,  இது போன்ற பள்ளிகளின் கட்டுமானத்தை உறுதி செய்திருக்கலாமே முதலமைச்சர் அவர்களே?

இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?

அலங்கார சொற்களை வைத்து ஏட்டு சுரைக்காய் திட்டங்களை  ஊடகங்களில் மட்டுமே தீட்டி வரும்,

மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த மாணவனுக்காக அழுவாரா?

இனியும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படா வண்ணம் தடுப்பாரா?

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]