சென்னை: தமிழ்நாட்டில், ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, மாதம் ஒரு முறை மின்கட்டணம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு இதுவரை செயல்படுத்த வில்லை. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கும் என அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.,

பெரம்பலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பொதுமக்கள் மின்சாரத்தை தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை கடும் நிதி நெருக்கடிக்கு இடையில் தான் செயல்பட்டு வருகின்றன. நிதி நிலைக்கு ஏற்ப மின்வாரியத்தில் சில புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக மின்வாரியத்திற்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்கள் நிதியை வழங்க வேண்டும். அந்த நிதியை பெறுவதில் தாமதம் இருந்தது. தற்போது அதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டு வருகிறது.

அதேபோல் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும். ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கும். ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? அன்புமணி ராமதாஸ்

[youtube-feed feed=1]