டெல்லி: 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி, ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும்,  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாகவும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 240 ஆகவும் உயர்த்தியும், இதற்கான பண பலனில்  மத்தியஅரசு 60 சதவிகிதம் மாநில அரசு 40 சதவிகிதம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது   “கிராமப்புற நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தை” மேம்படுத்தும் என மத்தியஅரசு கூறி உள்ளது.

அதாவது,  இதுவரை 100 நாள் வேலைத் திட்டத்தில் 90% நிதியை மத்திய அரசு வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் என திருத்தம். 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என கூறி உள்ளது.

முன்மொழியப்பட்ட விபி ஜி ராம் ஜி மசோதா, ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதிய வேலை நாட்களை ஆண்டுக்கு 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்துகிறது. இது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே ஒரு புதிய நிதிப் பகிர்வு விகிதத்தையும் அறிமுகப்படுத்துகிறது; பெரும்பாலான மாநிலங்களுக்கு இந்த விகிதம் 60:40 ஆக இருக்கும். வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு இந்த விகிதம் 90:10 ஆகவும், யூனியன் பிரதேசங்களுக்கு 100% ஆகவும் இருக்கும். திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியம் முழுவதுமாக மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) மாதிரியிலிருந்து இது வேறுபடுகிறது.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின்போது, ஏழை மக்கள் பசி போக்க  100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில்,   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

‘விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் – 2025’ என்ற பெயரில் கொண்டு வரப்படவுள்ள இச்சட்டத்தில், 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005ல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது. இந்த சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

ஊரக வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறப்படும் நிலையில்,  100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்தவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .

புதிய சட்டம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான்  பேசும்போது,   மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் பரவலாக மக்களை சென்றடைகின்றன. இதனால், அரசின் திட்டங்களும் முழுதாக அமலாகின்றன அதே சமயம், கிராமப்புறங்களில் தற்போதைய சமூக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப இந்த திட்டத்தை தகவமைப்பது அவசியம். வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போது உள்ள சட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால், புதிய சட்டம், அதிகாரமளித்தல், வளர்ச்சி, கிராமப்புறங்களை வளமாக்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டது.
நீர் தொடர்பான பணிகள் மூலம் நீர் பாதுகாப்பை உறுதி செய்வது, ஒட்டுமொத்த கிராமத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்புகளை பெருக்குதல் மற்றும் மோசமான வானிலைகளை சமாளிப்பதற்கான சிறப்பு பணிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றார்.

இந்த பெயர் மாற்றம் தொடர்பான விவாதத்தின்போது, மத்தியஅரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியது. மகாத்மா காந்தியின் பெயரை ஏன் நீக்குகிறீர்கள் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இரண்டு தசாப்த கால பழமையான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான எம்ஜிஎன்ஆர்இஜிஏ-வை ஏன் மாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்குப் பின்னணியில் உள்ள நோக்கங்களைக் கேள்வி எழுப்பி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் திட்டத்திற்குப் பெயர் மாற்றம் செய்வது அவசியம்தானா என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகாத்மா காந்தியின் பெயர் ஏன் நீக்கப்படுகிறது? மகாத்மா காந்தி நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும் மிக உயர்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். எனவே, அவரது பெயரை நீக்குவதை என்னால் உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. இதன் நோக்கம் என்ன? அவர்களின் உள்நோக்கம் என்ன?” என்று கேட்டார்.

“ஒரு திட்டத்தின் பெயர் மாற்றப்படும்போதெல்லாம், அலுவலகங்கள், எழுதுபொருட்கள் என பல மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது, அதற்காகப் பணம் செலவிடப்படுகிறது. அப்படியென்றால், இதன் பலன் என்ன? இது ஏன் செய்யப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார். இந்த நடவடிக்கை பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் செயல் என்று பிரியங்கா காந்தி கூறினார். மேலும், மதிப்புமிக்க விவாத நேரத்தை வீணடிப்பதன் மூலம் மத்திய அரசு தனது சொந்தப் பணிகளையே சீர்குலைப்பதாக அவர் தெரிவித்தார்.

“நாங்கள் விவாதிக்கும்போது கூட, அது மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி அல்லாமல், மற்ற பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறோம். நேரம் வீணடிக்கப் படுகிறது, பணம் வீணடிக்கப்படுகிறது, அவர்களே தங்களுக்குத் தாங்களே இடையூறு செய்துகொள்கிறார்கள், என்றவவர், . “இதன் பின்னணியில் என்ன மனநிலை இருக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. முதலாவதாக, இது மகாத்மா காந்தியின் பெயர், அதை மாற்றும்போது, ​​அரசாங்கத்தின் வளங்கள் மீண்டும் அதற்காகச் செலவிடப்படுகின்றன,” என்று கூறியவர், “அலுவலகங்கள் முதல் எழுதுபொருட்கள் வரை எல்லாவற்றிற்கும் பெயர் மாற்றப்பட வேண்டும், எனவே இது ஒரு பெரிய, செலவு மிகுந்த செயல்முறை. அப்படியென்றால், இதைத் தேவையற்ற முறையில் செய்வதால் என்ன பலன்? என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.

முதல்வர் ஸ்டாலின்

மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர்  ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். வாயில் நுழையாத வடமொழிப் பெயரை மத்தியஅரசு  திணித்துள்ளதாக  குற்றம் சாட்டியவர்,  வறுமை இல்லாத மாநிலம் என்பதால் இனி தமிழ்நாட்டுக்கு இத்திட்டப் பயன்கள் குறைவாகத்தான் கிடைக்கும்; வறுமையை ஒழித்ததற்காக தமிழ்நாடு தண்டிக்கப்பட உள்ளது  என்றும் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, சிதைத்து சின்னாபின்னமாக்கும் மத்திய அரசு, காந்தியின் மீதுள்ள வன்மத்தால், அவர் பெயரை துாக்கி விட்டு, வாயில் நுழையாத வடமொழி பெயரை திணித்துள்ளது. மத்திய அரசின் 100 சதவீத நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்திற்கு, இனி 60 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவராம்.

இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்து சாதனை படைத்துள்ளதற்காகவே, நம் தமிழகம் தண்டிக்கப்பட உள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான், இத்திட்டத்தின் பயன்கள் தமிழக மக்களுக்கு கிடைக்குமாம். பல கோடி பேரை, வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை, மத்திய அரசு ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை மக்கள் முறியடிப்பர் என சாடியுள்ளார்.

கிராமப்புற வாழ்வாதாரங்களை அரசாங்கத்தின் நீண்டகால வளர்ச்சி தொலைநோக்குப் பார்வையுடன் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, நேற்று வெளியிடப்பட்ட துணைப் பணிகளின் பட்டியலில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்  சிறப்பம்சங்கள்

* புதிய சட்டத்தின்படி, 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயரும்
* வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும்
* அந்த ஊதியம் இதற்கு முன் வழங்கப்பட்டதை விட குறைவாக இருக்காது
* வாரந்தோறும் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படும்
* 15 நாட்களுக்குள் வேலை வழங்காவிட்டால், அதற்கான படி தொகையை மாநில அரசுகளே வழங்க வேண்டும்
* விதைப்பு, நடவு மற்றும் அறுவடை காலங்களில் விவசாய பணியாட்களை, வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்ற அழைக்கக் கூடாது
* வேளாண் பருவ காலங்களில், விவசாய பணியாட்கள் போதிய அளவுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை
* பயோமெட்ரிக் அங்கீகாரம் உள்பட விரிவான டிஜிட்டல் முறையில் வேலை திட்டம்
* ஜி.பி.எஸ்., அல்லது மொபைல் போன் வழியாக பணியிடத்தை மேற்பார்வையிடுதல்
* நிகழ்நேர மேலாண்மை தகவல் முறை வழங்கப்படும்
* மோசடிகளை தடுக்க ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்
* மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படும். இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் வேலைவாய்ப்புகளை வழங்க திட்டங்களை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்
* இதற்கு முன், 90 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியது. இனி, 60 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்
* புதிய சட்டம் அமலான ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை மாநில அரசுகள் முடிக்க வேண்டும்
* அதன்பின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்
* ஒப்புதலான தொகையை விட கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டால், அதற்கான செலவுகளை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.

[youtube-feed feed=1]