டெல்லி: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது குறித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
கல்வி என்பது ஒருங்கிணைந்த பொதுப்பட்டியலில் (Concurrent List) இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். இது மற்றும் மாணாக்கர்களின் எதிர்காலத்தை சார்ந்தது. இதை மொழிப்பிரச்சினையாக பார்க்காதீர்கள், மத்தியஅரசு செய்வதைத் திணிப்பு (Imposition) என்று எடுத்துக் கொள்ளாமல், அதை மாணவர்களின் நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியது.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டில் 6 வாரங்களில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி இடங்களை கண்டறிய உத்தரவிட்டது; மாநில அரசு மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை நிறுவ மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு, மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தி, 6 வார காலத்திற்குள் பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்று வாதிட்டார். மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் உள்ள நிலையில், நவோதயா பள்ளிகள் பின்பற்றும் மும்மொழிக் கொள்கை இதற்கு எதிராக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தங்களுக்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்றும் வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் கல்வி என்பது ஒருங்கிணைந்த பொதுப் பட்டியலில் (Concurrent List) இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். இது மாணாக்கர்களின் எதிர்காலத்தை சார்ந்தது. மத்திய அரசு செய்வதைத் திணிப்பு (Imposition) என்று எடுத்துக்கொள்ளாமல், அதை மாணவர்களின் வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியதுடன், எதிர்மறையான மனப்பான்மையுடன் இதுபோன்ற விவகாரங்களை கையாளாதீர்கள் வழக்கறிஞரை சாடிய நீதிபதிகள், தயவு செய்து இந்த விவகாரத்தை ஒரு மொழிப் பிரச்னையாக மாற்றாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியதுடன், இந்த விவகாரத்தில், . மத்திய அரசுடன் அமர்ந்து பேசி நிலைமையைச் சரி செய்யுங்கள் என்றுஅறிவுறுத்தினர்.
நவோதயா பள்ளிகள் பின்பற்றும் மும்மொழிக் கொள்கைக்குப் பதிலாக, மாநிலத்தின் இருமொழிக் கொள்கை போன்ற நிபந்தனைகளை அரசு கலந்தாலோசனையின் போது முன்வைக்கலாம். மத்தியஅரசு நிதி நிலுவைத் தொகையைத் தீர்ப்பது குறித்தும் பேசலாம்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை அமைக்கத் தேவைப்படும் நிலத்தின் அளவை உறுதி செய்ய வேண்டும். 6 வார காலத்திற்குள் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு தரப்பினரும் பொது அறிக்கைகளைத் தவிர்த்து, நேருக்கு நேர் நேரடியாகப் பேச வேண்டும். இப்போதே பள்ளிகளை கட்ட உத்தரவிடவில்லை, இது ஆரம்பகட்ட ஆய்வு முயற்சி மட்டுமே என்றும் தெளிவுபடுத்திய நீதிபதிகள், எனது மாநிலம், எனது மாநிலம் என்ற மனப் பான்மை தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது கூட்டாட்சி (Federal) கலந்துரையாடலுக்கு வழிவகுக்கிறது என்றும் நீதிபதி நாகரத்னா வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் அந்தப் பள்ளிகளில் சேர உரிமை உள்ள மாணவர்களின் நலனுக்காகவே நாங்கள் மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தோம் என்று நீதிமன்றம் தனது உத்தரவின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
[youtube-feed feed=1]