டெல்லி: கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர்கள் பின்னர் உயர் பதவியைக் கோர முடியாது என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
“கருணை அடிப்படையில் பதவிக்கு விண்ணப்பிப்பவர் உயர் பதவிக்குத் தகுதி பெற்றவராக இருக்கலாம், ஆனால் அதற்காக அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று அர்த்தமல்ல,” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், கருணை அடிப்படையில் அரசு பணி கிடைக்கப்பெற்றவர்கள், அதே கருணையை காரணம் காட்டி உயர் பதவிகளை கோர முடியாது” என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு குறிப்பிட்டுள்ளது.

கருணை அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட இருவர், தங்களுக்கு இந்த பணிக்கு பதிலாக இளநிலை உதவியாளர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஒரு இறந்த ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டவுடன், அவரது உரிமை பயன்படுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு, உயர் பதவியில் நியமனம் கோருவதற்கான கேள்வி எழாது. இல்லையெனில், அது ‘முடிவற்ற கருணை’ என்ற நிலைக்கு வழிவகுக்கும்,” என்று நீதிமன்றம் கூறியது.
அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே இறக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கப்படும். வாரிசுகளின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணிகளில் அமர்த்தப்படுவர். இது, முழுக்க முழுக்க கருணை அடிப்படையில் கிடைக்கும் சலுகை ஆகும். நாடு முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், கருணை அடிப்படையில் அரசு துப்புரவு பணியாளர்களாக பணி கிடைக்கப்பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேர், தங்களுக்கு உயர் பதவி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றமும், அவர்களுக்கு ஜூனியர் அசிஸ்டென்ட் பதவியை வழங்குமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால், மன்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு சார்பில் ஆஜனரா வழக்கறிஞர், “கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணி வழங்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு, தனது கல்வித் தகுதி அடிப்படையில் உயர் பதவி கோர முடியாது” என வாதிட்டார்.
‘இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறுகையில், “கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கப்பட்டாலே, அவர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதாக அர்த்தம். அதற்கு பிறகும், அவர்கள் உயர் பதவியை கோருவதை ஏற்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, இருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தங்களை போல பணியில் சேர்ந்த மற்றொருவருக்கு உயர் பதவி கிடைத்ததால், தங்களுக்கும் அதை வழங்க வேண்டும் என கேட்பதில் எந்த அடிப்படையும் இல்லை.
சட்டத்துக்கு புறம்பாக சில அதிகாரிகள் செய்யும் தவறுகளை முன்னுதாரணமாக கொள்ள முடியாது. அதேபோல, அந்த தவறை மேலும் மேலும் நீட்டிக்கவும் இயலாது. குடும்ப உறுப்பினர்களுக்கோ, வாரிசுகளுக்கோ அரசு பணி வழங்கப்படுவது முழுக்க முழுக்க கருணை அடிப்படையில் மட்டும்தான். அப்படி பணியில் அமர்த்தப்பட்டவர், தனது தகுதியை மட்டுமே காரணமாக கூறி உயர் பதவியை கேட்கக் கூடாது. ஒரு முறை காட்டும் கருணையை, முடிவே இல்லாத கருணையாக மாற்ற முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]