சென்னை: சென்னையில் வீடு இல்லாமல் சுற்றி திரிபவர்கள், இரவு நிம்மதியாக ஓய்வு எடுக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேத்தில் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில், சகல வசதிகளுடன் தங்கும் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சென்னை மெரினா கடற்கரையில் வீடு இல்லாதவர்கள் பாதுகாப்பாக இரவு நேரத்தில் தங்குவதற்காக, ரூ.86 லட்சத்து 20ஆயிரம் மதிப்பீட்டில் இரவு நேர காப்பகம் கட்டப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தைச் சுற்றி நடைபாதை அமைத்தல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது இன்னும் ஒரு வாரத்திற்குள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, இந்த காப்பகத்தை இம்மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு தளமாக மெரினா கடற்கரை விளங்குகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருவதால், அனைத்து தரப்பட்ட மக்களும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயன்படுத்தும் வகையில் கடற்கரையை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில், வீடு இல்லாதவர்கள், முதியவர்கள், சாலையோர வியாபாரம் செய்பவர்கள், சாலையோரங்களில் பிச்சை எடுப்பவர்கள் உள்ளிட்ட பலர் இரவு நேரங்களில் மெரினா கடற்கரையின் மணற்பரப்பிலும், அருகிலுள்ள உள் சாலைகளின் ஒதுக்குப்புறங்களிலும் தங்கிவருகின்றனர். இதனால், அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்தது. இந்த விவகாரம் சென்னை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, மெரினா கடற்கரைப் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்காக பிரத்யேகமாக இரவு நேர காப்பகத்தை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, அண்ணா சதுக்கம் அருகே உள்ள காலியிடத்தில், சுமார் 2,400 சதுர அடியில் இந்த காப்பகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்தில் இந்த இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த காப்பகத்தைச் சுற்றி நடைபாதை அமைத்தல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்ததும், இம்மாத இறுதிக்குள் காப்பகம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
இந்த இரவு நேர காப்பகத்தில், 80 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. தங்கும் நபர்களுக்கு பாய், தலையணை, போர்வை போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படும். கழிப்பறை உள்ளிட்ட தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இங்கு தங்கும் நபர்களுக்கு இரவு நேர உணவை அம்மா உணவகம் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த காப்பகம் இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், காப்பகத்தின் பராமரிப்பு பணிகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
[youtube-feed feed=1]