டெல்லி: அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்தை 56 முன்னாள் நீதிபதிகள் கொண்டு குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் தீர்மானத்தில் சுட்டிக் காட்டியிருக்கும் காரணங்கள் திருப்திகரமாக இல்லை, அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்க முயற்சி செய்வது ஜனநாயக விரோத நடவடிக்கை. இது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என கடுமையாக சாடி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடந்த 9-ம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மான நோட்டீஸை அவரிடம் வழங்கினர். இந்த நோட்டீஸில் 120 எம்பிக்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 2 முன்னாள் நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் 5 முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட 56 நீதிபதிகள் நேற்று கண்டன அறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது, கொள்கை, அரசியல் சார்பு இன்றி நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் தீர்மானம் வழங்கப்பட்டிருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது நீதிபதிகளை அச்சுறுத்தும் முயற்சி ஆகும்.எதிர்க்கட்சி எம்பிக்கள் தீர்மானத்தில் சுட்டிக் காட்டியிருக்கும் காரணங்கள் திருப்திகரமாக இல்லை. அவசர நிலை காலத்தில் நீதிபதிகள் தண்டிக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட் ஆகியோர் தங்களது பதவிக் காலத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டனர். தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவை இந்திய நீதித் துறை, இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்க முயற்சி செய்வது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். இது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். தற்போதைய நிலையில் ஒரு நீதிபதி (ஜி.ஆர்.சுவாமிநாதன்) மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது. நாளை ஒட்டுமொத்த நீதித்துறை மீதும் தாக்குதல் தொடுக்கப்படலாம்.
இந்த நேரத்தில் நாடாளுமன்ற எம்பிக்கள், பார் கவுன்சில்களின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஓரணியாக திரண்டு நீதித் துறையை காக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒரு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். அதை விடுத்து அரசியல்ரீதியாக நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டன அறிக்கையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அனில் தியோ சிங், பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி, கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கமல் முகர்ஜி, சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோத் கோலி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சுப்பிரமணியன், சிவஞானம், சுதந்திரம் உட்பட 56 நீதிபதிகள் கையெழுத்திட்டு உள்ளனர்.
[youtube-feed feed=1]