சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இன்னும் மழை இருக்கு என்று கூறப்பட்டாலும, அதிகரித்து வரும் குளிர் காரணமாக மழைக்கான வாய்ப்பு குறைவு என்ற கருதப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், கனமழை காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தால சூழப்பட்டது. இதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணி, வடிகால் பணிகள் காரணமாக பல சாலைகள் சேதமுடன் காணப்படும் நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்பால் பெரும்சேதம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில், சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.89லட்சம் வீதம் மொத்தம் 15 மண்டலத்திற்கு ரூ.13.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 387 கிலோ மீட்டர் தூரத்திற்கு 471 போக்குவரத்து சாலைகளும் 5500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3174 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் முக்கிய ரோடுகளில் பள்ளங்கள் அதிகளவு இருக்கின்றன. இதில், சுமார் 109 கிலோ மீட்டர் சாலைகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக சாலை பணிகள் மறுசீரமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் கண்டறிந்து சீரமைக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் முக்கிய சாலைகள் எல்லாம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரமைக்கப்பட்டது.
தற்போது மழை தொடங்கி விட்டதால் புதிதாக போடப்படும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் எல்லாம் மழை காலம் முடிந்த உடன் தொடங்கப்படும். இதற்கிடையே டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையால் சென்னையில் சாலைகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் சாலைகள் சேதமடைவது இயல்பு தான். ஆனால், அந்த சேதங்களை உடனடியாக சரிசெய்வது மாநகராட்சியின் கடமையாகும். அதன் அடிப்படையில் சேதமடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கு ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன இயந்திரங்களை பயன்படுத்த சாலை சீரமைப்பு பணிகள் விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.
[youtube-feed feed=1]