மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி, கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், பிறை நிலா போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு தடை விதித்த விவகாரம் தென்மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மலைமீது ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவுக்கு இன்று (டிச. 11, வியாழக்கிழமை) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் தர்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று(புதன்கிழமை) மின்னஞ்சல் வந்தது. பின்னர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அது புரளி எனத் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இன்றும் சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என மதுரை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருப்பரங்குன்றம் மலையில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கடந்த சில நாள்களாக மலை மேல் செல்ல யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை . ஆனால் அங்கு திடீரென பிறை கொடி கட்டப்பட்டது குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. காவல்துறை தடையை மீறி மலை மீது சென்றது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]