சென்னை: சென்னை பாரிமுனை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதன்மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது. இருந்தாலும், நீதியை அவமதிக்கும்போக்கு அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில, ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாத விவகாரத்தி்ல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக நகராட்சி நிர்வாகத்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அரசின் துறைகளுக்கு இடையே ஒருமித்த எண்ணம் இல்லை என்றால் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு என குற்றம் சாட்டியதுடன், அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட பிரமிளா என்பவர் சிஎம்டிஏ-விடம் இருமுறை தி்ட்ட அங்கீகாரம் பெற்றும் அந்த இடத்துக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருந்ததால் வீட்டை கட்டமுடியவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உயர் நீதிமன்றத்தில் பிரமிளா அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ‘‘கடந்த 2012-ம் ஆண்டே திட்ட அனுமதி பெற்று காலாவதியாகி விட்டது. மீண்டும் திட்ட அனுமதி பெற்றும் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக இதுவரை வீட்டை கட்ட முடியவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் போலீஸார் எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. சாலையை ஆக்கிரமித்துள்ளவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்இணைப்பை துண்டிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவையும் அதிகாரிகள் மதிக்கவில்லை’’ என குற்றம் சாட்டினார்.
அப்போது மாநகராட்சி தரப்பில், இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு கோரி போலீஸாருக்கு 4 முறை கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை. போலீஸார் பாதுகாப்பு அளித்தால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும், என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு காவல்துறை தரப்பில், மாநகராட்சி எழுதிய கடிதங்களில் எந்த தேதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எவ்வளவு போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை, என தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களால் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘தமிழக அரசின் கட்டு்ப்பாட்டின்கீழ் உள்ள துறைகளுக்கு இடையே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விஷயத்தில் ஒருமித்த எண்ணம் இல்லை. இப்படி அதிகாரிகள் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி நாட்களை கடத்தினால் பாதிப்பு பொது மக்களுக்குத்தான். இதுபோன்ற அதிகாரிகளின் செயல்பாட்டை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல, அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை பல வழக்குகளில் பார்த்து விட்டோம். அதனால்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கும் உயர் நீதிமன்றம் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. எனவே, இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் மற்றும் தமிழக அரசின் டிஜிபி ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்களாவது இந்த சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல காலம் தாழ்த்திய அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜன.5-ம் தேதி இருவரும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவி்ட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
[youtube-feed feed=1]