டெல்லி : திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய வலியுறுத்தி மக்களவை சபாநாயகரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் தீர்மானம் வழங்கினர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வத்ராவும் இருந்தார். இந்த தீர்மானத்துக்கு இண்டி கூட்டணிகளைச் சேர்ந்த 120 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பதவி நீக்கக் கோரும் நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வழங்கினர். எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகரிடம் வழங்கினர். தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், நீதிபதி சுவாமிநாதனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் திமுக எம்.பி.க்கள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் விளக்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.