மதுரை: மதுரையில், முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை வெளியிட்டதுடன், முதலீட்டாளர்கள் மாநாடிலும் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியவர், மதுரைக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மதுரையில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், சுப்பிரமணியபுரத்தில், ‘மதுரை முத்து மேம்பாலம்’ – ஆண்டாள்புரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாலம் – மதுரை தெற்குவாசல் தியாகி என்.எம்.ஆர்.சுப்புராமன் மேம்பாலம் – மானம் காத்த மருதுபாண்டியருக்கு சிலை – பரிதிமாற் கலைஞருக்கு மணிமண்டபம், ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரா கோட்ஸ் மேம்பாலம், ஆனைக்கல் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், வைகை ஆற்றின் குறுக்கே மூன்று தரைப் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள், தத்தநேரி இருப்புப்பாதை உயர்மட்ட மேம்பாலம், மதுரை வடபகுதி ரிங் ரோடு, மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம், பூ மார்க்கெட், சென்ட்ரல் மார்க்கெட், எல்லீஸ் நகர் மேம்பாலம், இரண்டு பாலிடெக்னிக்குகள், வைகை இரண்டாம் குடிநீர்த் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம். வாடிப்பட்டி கைத்தறி ஜவுளி பூங்கா, மதுரை மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு அடித்தளம், இப்படி, கழக அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சி தான் இந்த அரசு நிகழ்ச்சி என்றார். மேலும் பேசுகையில், அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார். இதையடுத்து மதுரைக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மதுரை ஸ்டாலின் வெளியிட்ட 6 அறிவிப்புகள்
- மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க4 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்படும்.
- மீனாட்சி அம்மன் கோயில் நான்கு மாசி வீதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
- உத்தங்குடி உபரி நீர் கால்வாயில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- வாடிப்பட்டி வட்டத்தில்50 கோடி ரூபாய் செலவில் பல்வேறு சாலைகள் மேம்படுத்தப்படும்.
- மேலூர் அருகில் பாலாற்றின் குறுக்கே 9 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
- மேலூர் வட்டத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கேசம்பட்டி நீர்த்தேக்கம், அதனை சுற்றியுள்ள நீர்நிலைகள் தூர்வாரப்படும்.
இவ்வாறு கூறினார்.