சென்னை: சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில்,  பெற்றோர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொதுவாக இதுபோன்ற காலக்கட்டங்களில், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமே செயல்படும் என்றும்,  மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகளுக்கு   விடுமுறை விடப்பட்டு வருவதால், இன்றும் விடுமுறையா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிட்வா புயல் காரணமாக, பெய்து வந்த கனமழை காரணமாக,  சென்னை திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.  மழை ஒய்ந்த நிலையில், நேற்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டது. ஆனால்,  விடுமுறை தினமான சனிக்கிழமை பள்ளிகள்  வேலை நாளா என்பது குறித்து, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மாலை பள்ளிகள் முடியும்வரை எந்தவித அறிவிப்பையும்,  கல்வித்துறையோ, சென்னை மாவட்ட ஆட்சியரோ வெளியிடவில்லை. இதனால், இன்று விடுமுறை என பள்ளி ஆசிரியர்களும், மாணவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.

  இந்த நிலையில்  நேற்று மாலை (பள்ளிகள் முடிந்த பிறகே) இன்று  பள்ளிகள் செயல்படும் என்று தமிழக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இன்று, டிசம்பர் 6, வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

ஆனால்,  மேல்நிலை, உயர்நிலை, ஆரம்ப பள்ளிகள்  என குறிப்பிட்டு ஏதும் போடாத நிலையில், இது குறித்து ஒவ்வொரு  ஊடகங்களும், செய்தி தாள்களும் அவர்களின் கற்பனைக் கேற்ப செய்திகள் வெளியிட்டன.  சில ஊடகங்களில்,  உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டுமே இயங்கும் என செய்திகள்  வெளியிட்டன. இதனால் பெற்றோர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். பல பெற்றோர்கள் காலை முதலே ஆசிரியர்களிடம் இதுகுறித்து போன் போட்டு கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுதான் இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மழை காரணமாக நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 2ம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் இன்று செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஊடகங்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே செயல்படும் என செய்திகள் வெளியிட்டதால் பெற்றோர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

இனிமேலோவது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும்போது, எந்ததெந்த வகுப்புகளுக்கு  பள்ளிகள் செயல்படும் என்பதை விரிவாக, விவரமாக வெளியிடுவதே கல்விதுறைக்கு அழகு சேர்க்கும்…