சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக டிட்வா புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

இந்த புயல் சென்னை கடற்கரை அருகே வந்து நகராமல் நிலை கொண்டு இருந்ததால் சென்னையில் இடைவிடாது மழை பெய்தது. நேற்று (டிசம்பர் 5) முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து வெயில் தலை காட்ட தொடங்கியிருக்கிறது. அதேசமயம் பல்வேறு மாவட்டங்களிலும் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரையிலான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.