சென்னை: பிரபல  தமிழ்  படத்தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 நேற்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியத் திரைப்படத் துறையில்,  தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஏவிஎம் சரவணன். ஏவிம் என்றாலே நினைவுக்கு வருவது, ஏவிஎம் எனப்படும் உலக உருண்டையுடன் சுற்றும் லோகோவும், கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக காணப்படும் சரவணனும்தான். இந்தியத் திரையுலகில், குறிப்பாகத் தமிழ்த் திரையுலகில், அழியாத முத்திரையைப் பதித்த ஒரு பிரம்மாண்டமான நிறுவனம் ஏ.வி.எம். புரொடக்‌ஷன்ஸ் (AVM Productions). இதன் அசைக்க முடியாத தூணாக, நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் தரத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பெருமை ஏ.வி.எம். சரவணன் அவர்களையே சாரும்.

வயது முதிர்வு காரணமாக,  ஏ.வி.எம். சரவணன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக ஏ.வி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. மறைந்த அவருக்கு வயது 86 ஆகும்

தமிழ்த் திரையுலகில், கடந்த பல ஆண்டுகளாகத் தரமான படங்களைத் தயாரித்து வந்த புகழ்பெற்ற ஏ.வி.எம். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான  ஏ.வி.எம். சரவணன்  இவர்  இன்று (டிசம்பர் 4, 2025) அதிகாலை காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த ஏவிஎம் சரவணன்:

ஏ.வி.எம். சரவணன் அவர்கள், ஏ.வி.எம். நிறுவனத்தை நிறுவியவரும், தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவருமான ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார்  அவர்களின் மகன் ஆவார். ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் 1979 ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது புதல்வர்களான எம். குமரன், எம். பாலசுப்ரமணியம் மற்றும் எம். சரவணன் ஆகியோர் இணைந்து, தங்கள் தந்தையின் தயாரிப்பு பணியை தொடர்ந்தனர், ஏ.வி.எம். நிறுவனத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தனர், இதில், எம். சரவணன் அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

1980களுக்குப் பிறகு, ஏ.வி.எம். சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில், ஏ.வி.எம். நிறுவனம் பல வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டது. சுமார் 178-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. அவற்றில், ஏவிஎம் சரவணன் அவர்கள் மேற்பார்வையில் வெளியான சில படங்களை நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். சமூகப் பிரச்சனையைக் காட்டிய ‘நானும் ஒரு பெண், தேசிய விருது பெற்ற ‘சம்சாரம் அது மின்சாரம், காதல் காவியமான ‘மின்சார கனவு’,ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிகளில் ஒன்றான சிவாஜி மேலும், வேட்டைக்காரன் அயன் போன்ற வெற்றிப் படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

முரட்டுக்காளை (1980): ரஜினிகாந்தின் ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை உயர்த்திய திரைப்படம். சகலகலா வல்லவன் (1982): கமல்ஹாசன் நடித்த பக்கா கமர்ஷியல் வெற்றிப் படம். 1989 ஆம் ஆண்டு வரை அதிக வசூலைக் குவித்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றது. முந்தானை முடிச்சு (1983): கே. பாக்யராஜ் இயக்கி, நடித்த இந்தப் படம், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெள்ளி விழா கண்டது. ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானதும் இப்படத்தில்தான்.

சம்சாரம் அது மின்சாரம் (1986): குடும்ப உறவுகளின் சிக்கல்களைப் பேசிய இப்படம், அவருக்கு ஃபிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. சிவாஜி 2007): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். வேட்டைக்காரன் (2009), அயன் (2009) போன்ற வெற்றிப் படங்களிலும் இவரது பங்களிப்பு தொடர்ந்தது.

இவர் தயாரித்த படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றன. நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தும், தொழில்நுட்ப வளர்ச்சிகளைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியும் இவர் பணியாற்றினார்.

திரைப்படத் தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, ஏ.வி.எம். சரவணன் அவர்கள் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்: இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர். அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், சென்னை மாநகர செரீப் (Sheriff of Madras) (1986) உள்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

மேலும், இவரது கலைச் சேவைக்காக, தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் புதுச்சேரி அரசின் பண்பின் சிகரம் விருது போன்ற பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். அவரது மறைவு கலைத்துறைக்கு பேரிழிப்பாக பார்க்கப்படுகிறது.