இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது, ​​ஒரு விசித்திரமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது, இது அனைவரின் பாக்கெட்டையும் பதம் பார்க்கிறது.

2025 ஜூலை–செப்டம்பர் காலகட்டத்தில் கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி வேகமாக வளர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ கணக்குகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், நமது இந்திய ரூபாய் மதிப்பு தினமும் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த வருடம் மட்டுமே ரூபாய் மதிப்பு 4%–க்கு மேல் சரிந்துள்ளது.

டிசம்பர் 3, புதன்கிழமை, ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹ 90.05 ஆக சரிந்தது.

ரூபாய் பலவீனமாக உள்ளபோதும், இந்திய பொருளாதாரம் எப்படி வளர்கிறது? என்ற கேள்வி சாமானியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் ₹100 க்கு வாங்கிய பொருளை, இப்போது ₹104 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

2025ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) இந்தியாவில் இருந்து பில்லியன் கணக்கான முதலீட்டை திரும்பப் பெற்றுவருகின்றனர்.

இந்த மாத இறுதிக்குள் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஈடுசெய்ய மத்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியை சந்தையில் விற்றுவருகிறது, இதனால் கையிருப்பு 687 பில்லியன் டாலருக்கு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ரூபாய் மதிப்பு சரிவு தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

அதேவேளையில், உலகளாவிய அழுத்தம், அமெரிக்காவில் உயர்ந்த வட்டி, டாலருக்கான தேவை அதிகரித்தல் போன்ற காரணங்களால் ரூபாய் தொடர்ந்து சிரமப்படுகிறது.

இந்தியா பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தாலும், வெளிநாட்டு நிலைமை ரூபாயை பாதிக்கிறது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்றும், மொபைல், லேப்டாப், எலக்ட்ரானிக்ஸ் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடு சென்று படிப்பதற்கும், சுற்றுலா செலவும் அதிகரிக்கும் என்றும் டாலரில் கடன் எடுத்த நிறுவனங்கள் அதிகம் செலவு செய்ய நேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் இதனால் பொதுமக்கள் மீது அதிக சுமை ஏற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

IMF கணிப்பின்படி, அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.2% ஆக குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை எப்படி நடக்கிறது, வெளிநாட்டு முதலீடு மீண்டும் இந்தியாவுக்கு வருகிறதா என்பதைப் பொறுத்தே இந்திய ரூபாயின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.