டெல்லி: இந்தியாவில் இருந்து தப்பியோடியவர் உள்பட 15 பொருளாதார குற்றவாளிகள், இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எம்.பி ஒருவர், பொருளாதார குற்றவாளிகள் மீதான கடன்கள், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சொத்துக்கள் எவ்வளவு கேட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,
பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பி ஓடிய 15 பொருளாதார குற்றவாளிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
மொத்த நிலுவைத் தொகையில், அசல் தொகை ரூ.25,645 கோடி, அதே நேரத்தில் அதற்கான வட்டி ரூ.31,437 கோடியை எட்டியுள்ளது என்றும், இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.38,895 கோடி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது.
இவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்கள் கடன்பட்டுள்ளனர்.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகையை அவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் கடன்பட்டுள்ளார்.
வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,799 கோடி கடன்பட்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, சந்தேசரா குழுமமும் ரூ.900 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.