மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது மதுரை உள்பட தென்மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி, பாஜக, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் மதுரை யில் பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு, தமிழ்நாடு மக்களுக்கு குறிப்பாக, இந்து மக்களுக்கு எதிரான நிலையில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு தரப்பு முஸ்லிம்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மாலை முருகன் மலை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற இந்து அமைப்புகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால், அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அறநிலையத்துறை, அதற்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, மலை உச்சியில் தீபம் ஏற்ற உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கியது. மேலும், தீபம் ஏற்றும்போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை ஏற்று தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து திமுக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இது மதுரை உள்பட தென்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் மாபெரும் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், பிப்ரவரி 5ந்தேதி இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில் நடத்திய போராட்டத்தால், மதுரையே குலுங்கியது. அதுபோல மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உடனடியாகத் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியினர் கோயில் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் தீபமேற்றுவதற்கான நெய்யினை, தாங்களே தருவதாகக் கூறிய இந்து முன்னணியினர் உடனடியாகத் தீபம் ஏற்றுவதற்கான வேலைகளை தொடங்க வேண்டுமென கோயில் நிர்வாகத்தினரை வலியுறுத்தினர்.
திமுக அரசின் மேல்முறையீட்டுக்கு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. திமுக அரசு இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக செயல்படுவது ஏன்? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்இ “திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!