கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர்.
அதன்படி, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையலான குழுவினர் இன்று கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர்.

விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரூருக்கு வருகை தந்தனர்.
ஏற்கனவே கரூர் சம்பவம் குறித்து, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பேர் சிபிஐ அதிகாரிகள் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருந்தனர். இதைத்தொடர்த்நது, டிஐஜி அதுல்குமார் தாகூர் திங்கள்கிழமை கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்து அங்குள்ள சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின், இரு கார்களில் தவெக பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமான வேலுச்சாமிபுரத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, டிஐஜி அதுல்குமார் தாகூரிடம், சம்பவம் நடைபெற்றபோது, விஜய் வாகனத்தின் சிசிடிவி கேமராவில் இருந்து பெறப்பட்ட விடியோக்களின் பதிவுகள் கூறித்து பிரவீன் குமார் விளக்கம் அளித்து கூறினார். மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் உயிரிழப்புகள் நிகழ்ந்த இடம், தவெக தலைவர் நடிகர் விஜய் உரையாற்றிய வாகனம் நின்ற இடம், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது பொதுமக்கள் சிதறி ஓடிய இடம் ஆகியவற்றை காண்பித்து விசாரணை குறித்தும் விளக்கி கூறினார்.
இந்த நிலையில் நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் உள்ளிட்டோர் அடங்கிய சிபிஐ விசாரணை குழுவின் மேற்பார்வை குழுவினர் கோவை விமான நிலையத்திலிருந்து கார்கள் மூலம் கரூருக்கு வந்தனர். கரூர் தி பொதுப்பணி துறையின் சுற்றுலா மாளிகைக்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்தனர்.
ஏற்கனவே கரூரில் தங்கி வரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து உரிய விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் மற்றும் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையான குழுவினரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.