சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் குழு கடந்த சில நாள்களாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து,  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் உள்ளிட்டோர் அடங்கிய சிபிஐ விசாரணை குழுவினர் இன்று கரூர் வருகை தந்துள்ளனர்.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு மூத்த அதிகாரிகள் பேட்டி அளித்ததை காரணம்காட்டி, சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கு சட்டபூர்வ அடிப்படையாக அத்தகைய காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு பெரிய பேரிடரின் போது மீட்பு, நிவாரணம் மற்றும் விபத்து குறித்த தகவல்களைப் பற்றி பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். சட்டம் – ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்னை. மனுதாரரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதரமற்றவை.

கரூர் வழக்கில் புலனாய்வு விசாரணையில் எவ்வித குறைபாடும் நிரூபிக்கவில்லை. இதனால், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

41 பேர் பலி வழக்கு! கரூர் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ்அதிகாரிகள் நியமனம்…

நீதி வெல்லும்! கரூர் சம்பவம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பதிவு…