டெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்காளர் தீவிர சீர்திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது. மதியம் 2மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் 19 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்நேற்று எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் SIR பணிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் அமளியுடன் தொடங்கியது. அப்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தல். எம்.பி.க்களை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

அப்போது பேசிய  மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “விவாதங்களை அமைதியான மற்றும் ஒழுக்கமான முறையில் நடத்த வேண்டும் என்று நாங்கள் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஒரு பிரச்சினையை எழுப்ப, மற்ற பிரச்சினைகளில் சமரசம் செய்ய முடியாது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். சில கட்சிகள் அவையை சீர்குலைப்பது சரியல்ல.

தேர்தல்களில் எப்போதும் வெற்றி தோல்வி இருக்கும், ஆனால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தோல்வியால் கோபத்தை வெளிப்படுத்துவது சரியல்ல. எந்தப் பிரச்சினையையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.”

ஆனால் அதை ஏற்க மறுத்து  எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை ஆகிய 2 அவைகளிலும் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.