சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும் பணியில் 103 படகுகள் உடன்  22ஆயிரம் ஊழியர்களை சென்னை மாநகராட்சி  களமிறக்கி இருப்பபதாக தெரிவித்துள்ள நிலையிலும்,  தொடர் மழை காரணமாக,   ஒருபுறம் மழைநீர் வெளியேற்றப்பட மற்றொருபுரம் இருந்து மீண்டும் மழைநீர் வந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.

வடசென்னை, சென்னையின் புறநகர் பகுதிகள், மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என குறுஞ்செய்திகளை மொபைல் போன்களுக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில்,   தொடரும் மழை மற்றும் அதனால் மழைநீர் தேங்கி வருவதால்,   தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளதாகவும், இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையை சூறையாடிக டிட்வா புயல்  வலுவிழந்த நிலையில் சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி வருகிறது.  டிட்வா புயல் வலு குறைந்தாலும் சென்னையில் நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று  காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் பல தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை நகரைக் காட்டிலும் புறநகா் பகுதியிலும் மழையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக மெட்ரோ ரயில் பணி, மழைநீா் வடிகால் பணி, பறக்கும் ரயில்வே திட்டப் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் சோழிங்கநல்லூா், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூா், போரூா், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, நங்கநல்லூா், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இங்கு மாநகராட்சி ஊழியா்களும், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியா்களும், சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீரை உடனே அகற்றும் பணியில் ஈடுபட்டதால் ஓரளவு நிலைமை சீரானது. இருப்பினும் சில இடங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழைநீா் இன்னும் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்றதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. மழைநீா் அதிகமாக தேங்கிய பகுதிகளில் வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருந்தனா்.

8மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிகள் முடிவடைந்து மாணவர்கள் வீடுகள் திரும்பும் போது சிரமத்திற்குள்ளாகினர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சென்னையில் மழைநீர் வடிகாலுக்காக சுமார் 5ஆயிரம் கோடி ரூபாய் பணம் செலவிட்டதாக திமுகஅரசும், மாநகராட்சியும் கூறி வந்த நிலையில், எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என்று கூறியதையும் சுட்டிக்காட்டி பொதுமக்கள், திமுக அரசு மக்களை ஏமாற்றி உள்ளது, பணத்தை கொள்ளையடித்து விட்டது என கடுமையாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களிலும் திமுக அரசையும், மாநகராட்சியையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

மதுரவாயலில் சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் கழிவு நீருடன் கலந்தபடி மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள், கழிவுநீர் கால்வாயைப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். மேலும், சாலையில் தேங்கி இருக்கக்கூடிய கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

சென்னையில் உள்ள 27 சுரங்கப் பாதைகளையும் காவல் துறையினரும், மாநகராட்சி ஊழியா்களும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா். இங்கு மழையால் தேங்கிய தண்ணீா் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் சில சுரங்கப் பாதைகளில் மூன்று அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியதால், அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதையில் அதிக அளவில் தேங்கியதால், தண்ணீரை உடனே வெளியேற்ற முடியவில்லை. இதனால் அந்த சுரங்கப் பாதையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.

முக்கியச் சாலைகளான அண்ணா சாலை, காமராஜா் சாலை, பெரியாா் ஈ.வெ.ரா. சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, 100 அடிச் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளிலும், வேப்பேரி ராஜா அண்ணாமலை சாலை, பரங்கிமலை சா்ச் சாலை, துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை, கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு குடியிருப்புப் பகுதி, ஈக்காட்டுத்தாங்கல் ஆசா்கானா சந்திப்பு, திருமங்கலம் பள்ளி சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது.

இதுபோல வடசென்னை பகுதிகளுக்குள்பட்ட சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 7 இடங்களில் மரம் முறிந்தது ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்ததில் 2 காா்கள் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தன. அதேபோல நகா் முழுவதும் ஏழு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மெரீனா, பெசன்ட்நகா் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்வதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த தமிழ்நாடு அரசு, மீட்புபணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி,  சென்னையில் சுமார் 22ஆயிரம் பணியாளர்கள்  மக்களை மீட்கும் படகுகளுடன் களத்தில் இறங்கி உள்ளனர்.

 இது தொடர்பாக சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று  01.12.2025 காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை சராசரியாக 68.26 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 129.90 மி.மீட்டர் மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக உத்தண்டி பகுதியில் 4.80 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  நேற்று  (01.12.2025) 83,600 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள், தாழ்வான பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள 668 இடங்களை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்காக 49 மினி கட்டுப்பாட்டு அறைகளை பெருநகர காவல் துறையினா் ஏற்கெனவே திறந்து வைத்துள்ளனா்.

நேற்று முன்தினம்  (30.11.2025) 20 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்று  (01.12.2025) 77 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) சார்ந்த 60 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையை (SDRF) சார்ந்த 30 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 170 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. + 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர் 1 இலட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய தொகுப்பு 1 இலட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.