தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த வாரம் தொடங்கிய வெள்ள பாதிப்பில் இதுவரை 442 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 827 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன.

சுமாத்திரா தீவில், உணவு மற்றும் மருந்து கிடைக்காத நிலையில் மக்கள் வெள்ளநீரில் ஆபத்தாக சென்று கடைகள் நோக்கிப் போராடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சூறாவளிகள் பொதுவாக உருவாகாத பகுதியான மலாக்கா நீரிணையில் சென்யார் உருவானது விசித்திரம். கடந்த 5 ஆண்டுகளில் இப்படியானவை அதிகரித்து வருவதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில், வங்காள விரிகுடாவில் உருவான டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 334 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400 பேர் காணாமல் போயுள்ளனர்.

நாட்டின் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,48,000க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரிடர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அவசர நிலையை அறிவித்துள்ள அந்நாட்டு அதிபர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
அதேபோல், தாய்லாந்தில், தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். சொங்க்க்லா பகுதியில் மட்டும் 131 மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஹட் யாய் நகரில் 300 ஆண்டுகளில் இல்லாத அதிகமளவு மழை பதிவாகியுள்ளது.
வியட்நாமில், கோட்டோ சூறாவளியின் தாக்கத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் மையப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, வரலாற்று தளங்கள், சுற்றுலா பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த ஆண்டிலேயே, இயற்கை பேரிடர்களால் 400 பேருக்கு மேல் உயிரிழந்தோ, காணாமல் போயோ உள்ளனர், சேதம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 பேர் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 18,700 பேர் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.