“சர்வதேச அளவில் செயல்படும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வலையமைப்பு” குறித்து விசாரித்து வரும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சிட்னியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இயங்கும் ஒரு இணையதளம் மூலமாக குழந்தை துஷ்பிரயோகப் படங்கள், வீடியோக்களை வைத்திருந்ததும், பகிர்ந்ததும், பரப்ப உதவியும் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடந்த ரெய்டில், 26 வயது இளைஞர் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 26 வயது நபர் குழுவில் முக்கிய பங்காற்றியவர் என கூறப்படுகிறது. அவர் மீது 14 வகையான குற்றச்சாட்டுகள் — அதில் இணைய/டெலிகம்யூனிகேஷன் சேவைகளை பயன்படுத்தி குழந்தை துஷ்பிரயோகப் பொருட்களை வழங்கியது, அணுகியது போன்றவை – சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், 39, 42, 46 வயதுடைய மூவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதும் குழந்தை துஷ்பிரயோக உள்ளடக்கம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

போலீசார் கைப்பற்றிய மின்னணு சாதனங்களில், 5ல் இருந்து 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் ஆபாச வீடியோக்களும், மிருகங்களுடன் பாலியல் தொடர்பு கொண்ட காட்சிகளும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவுவது தினமும் அதிகரித்து கொண்டே இருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“வீடியோக்களில் இருக்கும் குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களை முடிந்த விரைவில் மீட்க நாங்கள் உலகம் முழுவதும் சேர்ந்து பணிபுரிவோம்.” என்றும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் மற்றும் உரையாடல்களைக் கொண்டு இந்தக் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக பாலியல் குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

இந்த வீடியோக்கள் எங்கிருந்து வந்தது என்பதை இன்னும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. வீடியோக்களில் இருக்கும் எந்தக் குழந்தையையும் இதுவரை அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.