இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளைச் சுற்றி இருந்த சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) உலகின் மிக முன்னேறிய நாகரிகங்களில் ஒன்று. நேராக அமைக்கப்பட்ட தெருக்கள், பல மாடி செங்கல் வீடுகள், ஃப்ளஷ் டாய்லெட் போன்ற சுகாதார வசதிகள் – இவை அனைத்தும் அந்தக் காலத்தின் அதிசயங்கள்.

இந்த நாகரிகம் ஏன் திடீரென வீழ்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி பல வருடங்களாக பல விதமான கருத்துகள் இருந்தன. சிலர் பேரழிவு நடந்தது என்றனர், சிலர் போர் ஏதோ நடந்திருக்கலாம் என்றனர். ஆனால் சமீபத்திய புதிய ஆய்வு ஒரு தெளிவான காரணத்தை கூறுகிறது.

ஐஐடி காந்திநகரை சேர்ந்த முன்னணி ஆய்வாளர் ஹிரென் சோலங்கி, கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் நீரியல் நிபுணர் பாலாஜி ராஜகோபாலன், காலநிலை விஞ்ஞானி விமல் மிஸ்ரா, வூட்ஸ் ஹோல் கடல்சார் நிறுவனத்தின் புவியியலாளர் லிவியு ஜியோசன் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் – தொடர்ச்சியாக பல நூற்றாண்டுகள் நீண்ட வறட்சிகள் காரணமாக சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததாக முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆய்வு எப்படி நடந்தது?

கிமு 3000 முதல் 1000 வரையிலான காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்யப்பல இடங்களில் இருந்து கிடைத்த பழைய காலநிலை (paleoclimate) தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்திய குகைகளில் கிடைத்த ஸ்டாலாக்டைட், ஸ்டாலாக்மைட் பதிவுகள், ஏரிகளில் உள்ள நீர்மட்டப் பதிவுகள், கணினி காலநிலை மாதிரிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.

இதன் மூலம் அவர்கள் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தனர்:

ஹரப்பா போன்ற நகரங்கள் ஒரு பெரிய பேரழிவால் அல்ல; நீண்டகால வறட்சிகளால் வீழ்ச்சி அடைந்தன.

வறட்சிகள் மக்களை என்ன செய்ய வைத்தன?

  • நீர் கிடைக்காததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • நதிகளின் நீர் குறைந்ததால் வர்த்தகம் சரிந்து போனது.
  • உணவு உற்பத்தி குறைந்தது.
  • நிர்வாகம் பலவீனமாகியது.
  • மக்கள் தொடர்ந்து புதிய இடங்களுக்கு இடம்பெயரத் திணிக்கப்பட்டனர்.

இவை அனைத்தும் சேர்ந்து ஹரப்பா மக்கள் நகரங்களிலிருந்து வெளிப்புறக் கிராமங்களுக்கு பரவச் செய்து, நாகரிகம் மெதுவாக சுருங்கியது.

லா நினா போன்ற ஈரமான காலநிலை

கிமு 3000–2475 காலப்பகுதியில்:

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட குளிர்ச்சி காரணமாக அதிகமான பருவமழை பெய்ததால் விவசாயத்திற்கு உகந்த காலநிலை நிலவியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் பெரிய நகரங்களை உருவாக்க முடிந்தது.

பின்னர் என்ன நடந்தது?

அடுத்த பல நூற்றாண்டுகளில் பசிபிக் பெருங்கடல் வெப்பமானதால் பருவமழை குறைந்து வெப்பநிலை மேலும் அதிகரித்து வறண்ட காலநிலை நிலவியதாகக் கூறுகின்றனர்.

இதன் உச்சத்தில் நான்கு பெரிய வறட்சிகள் ஏற்பட்டதாகவும், குறிப்பாக:

 

கிமு 2425 முதல் 1400 வரை 4 வறட்சி காலங்கள் ஏற்பட்டதாகவும் ஒவ்வொன்றும் 85 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் கி.மு. 1733ல் தொடங்கிய மூன்றாவது வறட்சி காலம் மிகக் கடுமையானது என்றும் அது 164 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 0.5°C உயர்ந்ததுடன் மழைப் பொழிவு 10–20% குறைந்ததாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், ஏரிகள் வற்றின, நதிகள் ஓடாது போயின, மண் உலர்ந்தது, நதி வழி வர்த்தகம் நின்றது, விவசாயம் சாத்தியமே இல்லாத நிலைக்கு வந்தது.

இதுவே மக்கள் நகரங்களை விட்டு வெளியே போகும் நிலையை ஏற்படுத்தியது.

 

அப்படியிருந்தும், அந்த நாகரிகம் 2000 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தது!

இதற்கு காரணம் அவர்கள், விவசாய முறைகளை மாற்றினர், வர்த்தக வழிகளை பல்வேறு படுத்தினர், நதிகளுக்கு அருகில் குடியேறினர், நீரைச் சேமிக்கும் முறைகளையும் பயன்படுத்தினர்.

இது அவர்களின் மிகப்பெரிய மீள்தன்மையை (resilience) காட்டுகிறது.

இது இன்றைய உலகிற்கு என்ன சொல்லுகிறது?

ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவதாவது:

“காலநிலை மாற்றத்தால் இன்றும் இதேபோன்று பல சமூகங்கள் பாதிக்கப்படலாம்; பழைய நாகரிகத்தின் அனுபவம் நமக்குப் பெரிய பாடமாகும்.”

பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை எப்படி மாறுகிறது என்பது எதிர்கால இந்திய பருவமழைக்கும் மிக முக்கியமானது என்று ஆய்வு குழு குறிப்பிடுகிறது.