சென்னை: பருவமழையை முன்னிட்டு தலைமை செயலாளர் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக-கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவி வரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டமும் நடைபெற்றது. அப்போது, பேரிடரை எதிர்கொள்ள பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,740 கோடி மதிப்பீட்டில் பேரிடர் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த தொகையை விட, நாம் அதிகமாக பேரிடர் நிவாரண பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் நன்மைக்காக அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இந்த பணிகளை நாம் தொய்வில்லாமல் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
மழைக் காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான். அதனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, பேரிடர் மேலாண்மையில் தனிக் கவனம் செலுத்தி, இயற்கை இடர்பாடுகளின் போது ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது, அது அப்படியே தொடர வேண்டும்.
அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் களத்தில் ஆய்வு செய்து, தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மேலாண்மைக்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, முறையாக பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பணி அமைய வேண்டும். காலநிலை மீள்தன்மைக்குத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து, கவனத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
நவ.29-30 ஆகிய தேதிகளில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மீன்வளத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும்.
மேலும், தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்கவும், மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்தும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அங்கு முறையாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தலைமைச் செயலாளர் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.