ஹாங்காங்கில் உள்ள தாய் போ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.

100க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் இங்கு தேடுதலை நிறுத்தப்போவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

1948க்குப் பின் நடைபெற்ற மிகப்பெரிய தீவிபத்தாக இது கருதப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பெயர் போன நவீன நகரமான ஹாங்காங்கில் ஏற்பட்ட இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த கட்டிடம் 1983ம் ஆண்டு முதல் புழக்கத்தில் உள்ளதாகவும் இது அரசு மானியத்தில் வழங்கப்பட்ட குடியிருப்பு என்றும் கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் துவங்கிய நிலையில் அதற்காக பிரெஸ்டிஜ் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நவீன நகரமாக இருந்தபோதும், கட்டுமான உபகரணங்கள் அதிலும் சாரம் அமைப்பதற்கு மூங்கில் கொம்புகளே சிறந்தது என்று இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் வளைந்து கொடுக்கும் தன்மை, அபரிமிதமாக கிடைப்பது, சிறிய இடைவெளியில் உள்ள இரண்டு கட்டிடங்களை பொருத்தமாக இணைக்க, ஒழுங்கற்ற கட்டிட அமைப்பாக இருந்தாலும் அதற்கேற்றபடி சாரம் அமைக்க என மூங்கில் பலவிதங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இருந்தபோதும், மூங்கில் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க கட்டுமான நிறுவனங்களை அரசு வலியுறுத்திவருவதோடு இரும்பாலான ஸ்திரத்தன்மையுடன் கூடிய சாரங்களை அமைக்கவும் வலியுறுத்துகிறது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான கட்டிடத்தில் மூங்கில் மற்றும் ஃபோம் துணிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் மளமளவென தீ பரவியதாகவும் தீ விபத்திற்கான மூல காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ஊழியர்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.