சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை டிட்வா புயலாக மாறும்  என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக  நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.  திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை 28ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அருகிலுள்ள இலங்கை கடற்கரையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து இன்று மாலை புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 5.30 மணி அளவில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும், இலங்கையின் மட்டக்களப்பிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு  மையம் கொண்டுள்ளது . நேற்று தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

தற்போது,  தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், இது அடுத்த 3 மணி நேரத்தில் (இன்று மாலை)  புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ‘டிட்வா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் அதற்கடுத்த 48 மணிநேரத்தில் (29-ந்தேதி) வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

இதன் காரணமாக,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வடகடலோர தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.‘

டிட்வா  புயல் காரணமாக (வியாழக்கிழமை) இன்று முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை ( 28ந்தேதி –  வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (29-ந்தேதி) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மலாக்கா ஜலசக்தி பகுதியில் புயல் உருவானது. இது இந்தோனேசியாவில் கரையை கடந்தது. அதன் பின்னர் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து மலாக்கா ஜலசக்தி பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு தென்கிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அது படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.