சென்னை: விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, அவரது யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
நெல் ஈரப்பத்துடன் கொள்முதல் செய்ய மத்தியஅரசு மறுத்த நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் கொட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண தூக்கம் போடும் பழனிசாமிக்கு, திமுக அரசு என்றால் வீராவேசம் வந்துவிடுகிறது. பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள்தான்!
நெல்மணிகள் நனைந்துவிட்டது என ஸ்பாட்டுக்கு போய் ஓரங்க நாடகம் போட்ட பழனிசாமி, ஒன்றிய அரசு நெல் ஈரப்பத அளவினை 22 சதவிகிதமாக உயர்த்தாததைக் கண்டிக்காமல் எங்கே போனார்?
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது பழனிசாமி எங்கிருந்தார்? மோடி அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, சாகுபடி, பயிர்க்காப்பீடு பற்றியெல்லாம் பேச அருகதை இருக்கிறதா? கஜா புயலின் போது பயிர்கள் எல்லாம் நாசம் ஆன நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்ட பழனிசாமி எல்லாம் விவசாயியா?
நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சிப்பது ஒன்றிய பாஜக அரசு. அதை எதிர்த்துக் கேட்கத் திராணியில்லாத, தைரியமில்லாத துரோகி பழனிசாமி வீணாகத் தமிழ்நாடு அரசின் மீதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மீதும் அவதூறை பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா என்ன?
விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்!
பல்லுயிர்ப் பெருக்கத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் காரணமான கனிம வளச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்த வரலாறு தானே உங்களுடையது.
’மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குச் செய்தன என்னவென்று!’ எனக் கேட்கிறார். 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்கடித்து பழனிசாமிக்கு மக்கள் அளித்த பதில் தெரியவில்லையா?
கோவை, மதுரை மெட்ரோவுக்கு வர வேண்டும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதையே பெரும் சாதனையாகத் தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சியில் இருந்த போது அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.
டிவி-யை பார்த்து ஆட்சி நடத்திய கையாலாகாத, நிர்வாகத் திறனற்றவர் என்று இந்தியாவே சிரித்த முதல்வர்தானே பழனிசாமி. கால்கள் மாறுவதையும் கார்கள் மாறுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பழனிசாமிக்கு ரோசம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பார்த்துவிட்டு வரும் போது ஏசி காரிலும் ’குப்’ என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?” தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? என எடப்பாடி பழனிச்சமியை முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் , அதற்கு எடப்பாடி காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
“நெல் கொள்முதல் விஷயத்தில் திமுக அரசு மெத்தனமாக, அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதால் விவசாயிகள் துன்பப்படுகின்றனர். முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி படுகை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்துள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு பயிரகளை அறுவடை செய்திருந்தால் நெல் மழையில் நனைத்திருக்காது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவு உள்ளது. இதுதான்உண்மை நிலை. இதை மறைக்க எங்கள்மீது விமர்சனம் செய்துவருகிறார் என கூறியிருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் குறவை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் அரசு திமுக அரசு. விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் சினிமா பார்க்க செல்கிறார் முதல்வர்.
விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசு. என்னை பச்சை துண்டுபோட்ட விவசாயி என ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். நான் விவசாயிதான் என்பது அனைவருக்கும் தெரியும். எம்எல்ஏ ஆனது முதல் விவசாயம் செய்து வருகிறேன். மறைத்து சொல்லவில்லை. அது தான் எனது தொழில். ஆனால், விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு ஆனால், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சி செய்தவர் ஸ்டாலின். அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பதால் என்னை விமர்சனம் செய்கிறார்.
நெல் ஈரப்பதம் 22 சதவீமாக ஆக உயர்த்தம் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. என்ன காரணத்துக்காக நிராகரித்தார்கள் என்று சொன்னால் தானே பதில் சொல்ல முடியும். 3 வேளாண் சட்டங்கள் என்ன என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் சொல்லட்டும். நான் சொல்கிறேன். தமிழக விவசாயிகள் எப்படி அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் சொல்ல வேண்டும்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டது கிடையாது. கோரிக்கைகளை நீங்கள் தான் போராடிவாங்க வேண்டும். எதிர்க்கட்சி தான் அதை செய்ய வேண்டியுள்ளது. காவிரி பிரச்சனையில் அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் முடக்கினார்கள். நீட் பிரச்சனை பற்றி திமுகவினர் என்ன பேசினார்கள். நாடாளுமன்றத்தில் பேச முடிந்ததா? பேசினால், நீங்கள் செய்த ஊழல் வெளியே வந்துவிடும் என அச்சம். 100க்கு 100 வெற்றி என மார்தட்டிக்கொள்ளக்கூடாது.
ஓட்டு போட்ட மக்களுக்கு நன்மை செய்யணும். 39 எம்.பிக்களை வைத்து இருந்து என்ன பயன்? மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படும்போது வாதாடி, போராடி பெறத்தான் உங்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால், அதை மறந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் செய்ய மறந்ததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதனை பற்றி கவலைப்படவில்லை.
நிரந்தர டிஜிபி நியமனத்தில் திமுக அரசுக்கு தடுமாற்றம் ஏன்? நிரந்தர டிஜிபி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால், அதைப் பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகிறார். எனக்கு அருகதை உள்ளது. உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. மாநில அரசு தான் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பான பட்டியலை அனுப்ப வேண்டும். பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழக அரசுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால் தான் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. இதுதான் உண்மை. ஆனால் சட்டத்துறை அமைச்சர், தவறாக இப்படி பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம்.
இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு எப்படி உருப்படும்? உண்மை செய்திகளை மக்களிடம் சொல்ல வேண்டும். மக்களுக்கு ஏதும் தெரியாது என நினைக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.