ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அரவணைக்க திமுக, தவெக தயாராக உள்ள நிலையில், விரைவில் மாற்று கட்சியில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கலகலத்துபோய் உள்ளது. பல மூத்த தலைவர்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளதுடன், இதுவரை எந்தவொரு தேர்தலில் வெற்றிபெறாத நிலையே நீடிக்கிறது. இதையடுத்து, அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை ஒற்றிணைக்க அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த எடப்பாடி, செங்கோட்டையனின் கட்சிப்பதவிகரளை பறித்தார். இருந்தாலும் அவர் அதிமுக கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார். ஆனால், பசும்பொன்தேவர் குருபூஜை அன்று, பசும்பொனுக்கு து ஓபிஎஸ்வுடன் ஒரே காரில் செங்கோட்டையன் வந்தார். அங்கு சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து பேசியது மட்டுமல்லாமல் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எடப்பாடியை அகற்றுவதே தங்களது குறிக்கோள் என பேட்டி அளித்தனர்.
இதனையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் அடுக்கினார். இந்நிலையில் அடுத்து செங்கோட்டையன் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. முதலில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜயின் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஓபிஎஸ்-சும், எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்துள்ளார். பிரிந்து சென்றவர்களை சேர்க்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்: 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்துக் காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு உறுப்பினராக இருக்க கூடாது என நினைத்து நீக்கியிருக்கிறார்கள். இது மன வேதனையாக இருக்கிறது. இப்போது எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை என்று கூறிவிட்டு சென்றார்.
இதனால் அதிமுக உள்பட தமிழக அரசியல்கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை று ராஜினாமா செய்துவிட்டு, விரைவில் திமுக அல்லது தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில், செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.