சென்னை: அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள்  புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நவ.29ம் தேதி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையாக  ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலம் தெற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ‘அதேவேளையில்,  குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடையும்; அந்தமான் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு 6 மணி நேரத்தில் மண்டலமாக வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் சென்யார் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவ.29ம் தேதி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில், இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,  வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், குளச்சல் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 90க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பாததால் மீனவ மக்கள் பதற்றமடைந்துள்ளன. மீனவர்களின் நிலை குறித்து தகவல்களை திரட்டும் பணியில் மீன்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.