கோயமுத்தூர்: கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தவறான கருத்தை தெரிவித்துள்ளதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரு நாள் பயணமாக கோவை திரும்பூரில் களஆய்வு மேற்கொள்ளும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோவை வருகை தந்தார். அவருக்கு எதிராக கோவை பாஜக சார்பில் கருப்புக் கோடி போராட்டம்: நடத்தப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து, சாலையில் இருந்து அகற்றினர்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆர்யை சரிவர தயார் செய்யாததைக் கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டம் கல்லூரி மாணவர்கள் இடையே அதிகரித்து உள்ளதைக் கண்டித்தும் கோவை பவர் ஹவுஸ் பகுதியில் பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோபேக் ஸ்டாலின் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வருகை தருகிறார். அங்கு செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறாா். பின்னா் செம்மொழிப் பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவா்கள் மற்றும் கோவை தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் என 150 பேருடன் கலந்துரையாடுகிறாா்.
கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை, இன்று காலை 11.45 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். கோவைக்கு மேலும் ஒரு நவீன மற்றும் கலாச்சார அடையாளத்தை அளிக்கும் விதமாக, 165 ஏக்கர் பரப்பளவிலான திட்டத்தில், முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்தில், ரூ. 208.50 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு, காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா முழுவதும் தற்போது கண்கவர் மின்விளக்குகள், வண்ண அலங்காரங்கள், ஓவிய விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு இரவில் பிரம்மாண்டமாக ஒளிர்கிறது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மொழிப் பூங்கா பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பங்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில் பன்முக வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த பூங்காவில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுகள் மற்றும் மலை குன்றுகள், உணவகங்கள் மற்றும் படிப்பகங்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகள், நடைபாதைகள் மற்றும் அமர்விடங்கள் மற்றும் பசுமை நிலப்பரப்புகள் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் புதுப்பிப்பு நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா, கோயம்புத்தூர் மாவட்டத்தின் புதிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தலமாக அமையவிருக்கிறது.